திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு - இனி தரிசனம் ஈசி
திருப்பதி கோவிலில் இலவச தரிசன டிக்கெட் பெறும் பக்தர்களுக்கு சூப்பரான அறிவிப்பு ஒன்றை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் கொரோனா காரணமாக சிறப்பு தரிசனம், இலவச தரிசனம் உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதனிடையே பிப்ரவரி மாதத்துக்கான 300 ரூபாய் கட்டண தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் விற்கப்பட்ட நிலையில். இலவச தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் வழக்கம்போல் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி நேற்று திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா அன்னதானக்கூடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்து பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது ஏழுமலையானை தரிசிக்க பக்தர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு இலவச தரிசனம் தொடங்கி சிரமமில்லாமல் வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். மேலும் ஏப்ரல் மாதம் முதல் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் விலையை உயர்த்தும் எண்ணம் இல்லை.
சாதாரணப் பக்தர்களுக்கு விரைவான தரிசனம் வழங்கும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசன டிக்கெட் பெறும் பக்தர்கள் அன்றே சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.