திருப்பதியில் இனி தரிசன டிக்கெட் பெறுவது ஈஸி - வெளியாகும் சூப்பர் அறிவிப்பு

tirupati darshantickets திருப்பதி ஏழுமலையான்
By Petchi Avudaiappan Dec 12, 2021 01:06 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in இந்தியா
Report
114 Shares

திருப்பதி பக்தர்களுக்கு எளிதாக தரிசன டிக்கெட் கிடைக்கும் வகையில் சூப்பரான அறிவிப்பு வெளியாகவுள்ளது. 

கொரோனா தொற்று இந்தியாவில் குறைந்ததால் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பல மாநிலங்களிலிருந்து திருப்பதியை நோக்கி பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.

பக்தர்களின் வசதிக்காக திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அந்த வகையில் தரிசன டிக்கெட்டுகளை எளிதாக பெறுவதற்கு புதிய திட்டத்தை முன்னெடுக்க உள்ளது.

அதன்படி திருப்பதி செல்லும் பக்தர்களின் வசதிக்காக, நாள்தோறும் 1,000 விரைவு தரிசன டிக்கெட்டுகளை, அந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் பேருந்துகளில் டிக்கெட் எடுக்கும் போதே விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த புதிய திட்டத்தின்படி, ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருப்பதிக்கு டிக்கெட் எடுக்கும் போதே, கூடுதலாக ரூ.300 செலுத்தி விரைவு தரிசன டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். திருப்பதி திருமலையில், ஒவ்வொரு நாளும், காலை 11 மணிக்கும், மாலை 4 மணிக்கும், விரைவு தரிசனம் மூலம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு பேருந்து டிக்கெட்டுடன் விரைவு தரிசன டிக்கெட் பெற்றவர்கள், கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக, திருப்பதி பேருந்து நிலையத்திலேயே உதவி மையங்கள் செயல்பட உள்ளன. ஆந்திர மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் சார்பில், திருப்பதிக்கு சென்னை, பெங்களூரு, காஞ்சிபுரம், புதுச்சேரி, ஹைதராபாத் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து நாள்தோறும் 650 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நகரங்களிலிருந்து பேருந்து மூலம் வருவோர், இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து பயணத்துக்காக முன்பதிவு செய்யும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகத்தின் இணையதளமும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி முதல் மாற்றப்படுகிறது.

அதன்படி, இதுவரை பயன்படுத்தி வந்த www.apsrtconline.org.in இந்த இணையதளத்துக்குப் பதிலாக, பிப்ரவரி முதல் www.apsrtconline.in இந்த இணையதளம் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசன அனுமதி உள்ளவா்கள், தங்களுடன் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.

தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் காலை 6 மணிக்குப் பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணி நேரமும் அலிபிரி நடைபாதை மாா்க்கம் வழியாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலைப் பாதை காலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, இரவு 12 மணிக்கு மூடப்படுவது குறிப்பிடத்தக்கது.