காதலில் ஏற்பட்ட சந்தேகம் - பள்ளி மாணவி கழுத்தை அறுத்து காதலன் தற்கொலை! மாணவி படுகாயம்!
திருப்பத்தூர் அருகே காதலில் ஏற்பட்ட சந்தேகத்தால் பள்ளி மாணவி கழுத்தை அறுத்து, காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகர் பகுதியை சேர்ந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவியும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் சசிகுமார் என்பவரும் பல நாட்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், தினந்தோறும் வீட்டிற்கு வெளியே உள்ள மைதானத்தில் சசிகுமார் நள்ளிரவு வரை செல்போனில் உரையாடி தன் காதலை வளர்த்து வந்துள்ளார்.
இதனை தொடர்ந்து நேற்றிரவு தன் காதலியை அந்த மைதானத்திற்கு வரவழைத்துள்ளார்.
இருவரும் நள்ளிரவு வரை பேசி கொண்டிருந்த நிலையில், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபமடைந்த சசிகுமார், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியை கழுத்தில் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் வலி தாங்க இயலாமல் மாணவி கூச்சலிடவே, சசிகுமாரும் அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த மகளை கண்ட பெற்றோர், ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மேலும் மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சசிகுமாரின் வீட்டிற்கு புறப்பட்டனர்.
அப்போது தான், சசிகுமார் தன் வீட்டில் உள்ள தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து அவரது சடலத்தை மீட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.