நெல்லை, பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்த விபத்து - 3 பேர் கைது
நெல்லை அரசு உதவி பெறும் பள்ளியின் கழிவறை சுவர் இடித்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான நிலையில், விபத்து தொடர்பாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பள்ளியின் தாளாளர், பள்ளி தலைமையாசிரியை மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நெல்லை டவுன் எஸ்.என்.ஹைரோடு பொருட்காட்சி மைதானம் எதிரே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்தப் பள்ளியில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து தற்போது மாணவர்கள் நேரடியாக சென்று கல்வி கற்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல மாணவர்கள் பள்ளிக்கு சென்றபோது காலை 11 மணியளவில் இடைவேளை நேரத்தின்போது மாணவர்கள் கழிவறைக்கு செல்லத் தொடங்கினர்.
திடீரென கழிவறையின் தடுப்புச் சுவர் இடிந்து அங்கு நின்ற மாணவர்கள் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
மற்றொரு மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். 4 மாணவர்கள் காயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் உறுதித்தன்மை இல்லா கட்டிடங்களை உடனடியாக இடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது கழிவறை சுவர் இடித்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் பலியான நிலையில், விபத்து தொடர்பாக பள்ளியின் தாளாளர் சாலமன் செல்வராஜ், தலைமையாசிரியை ஞான செல்வி மற்றும் கட்டிட ஒப்பந்ததாரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.