"மாணவர்கள் உயிரிழப்பு துரதிருஷ்டவசமானது, இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க குழு அமைக்கப்படும்" - அன்பில் மகேஷ்

tamil nadu tirunelveli collapsed school toilet wall children died
By Swetha Subash Dec 17, 2021 09:26 AM GMT
Report

நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

நெல்லை பொருட்காட்சி திடல் அருகே அமைந்துள்ள சாஃப்டர் மேல்நிலைப்பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

அதில் அன்பழகன், விஸ்வரஞ்சன், சுதீஷ் ஆகிய 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பல மாணவர்கள் படுகாயமங்களுடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர் .

சம்பவ நேரத்தின்போது 8 மற்றும் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாகவும், சுமார் 30 மாணவர்கள் கழிவறையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

சுவர் இடிந்து விழுந்தவுடன் மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டதாக தெரிகிறது. அவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாணவர்கள் உயிரிழப்புக்கு தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததற்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

மேலும் அவர் கூறியதாவது, நெல்லையில் கழிவறை சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என அனைத்துப் பள்ளிகளின் தரத்தை ஆய்வு செய்ய பொறியாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து விளக்கமளிக்க பள்ளி நிர்வாகத்திடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பழைய கட்டடங்கள் உள்ள பள்ளிகளுக்கு அங்கு குழந்தைகளை அனுமதிக்காதீர்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படியே பள்ளிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது அரசுப் பள்ளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும் என தெரிவித்தார்.

பள்ளி சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் விபத்து காரணமாக, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பரபரப்பும் அதிர்ச்சியும் சோகமும் தொற்றி கொண்டுள்ளது.

சமீப காலமாக தொடர்ந்து பெய்து வந்த மழைக் காரணமாக சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் எனவும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது