திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - பிரதமருக்கு வைரமுத்து வேண்டுகோள்!
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையிலிருந்து வட அமெரிக்காவுக்கு 60 திருவள்ளுவர் சிலைகள் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம் சார்பில், வட அமெரிக்கா தமிழ்ச் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் கால்டுவெல் வேள்நம்பியிடம் சிலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இந்த சிலைகளில் இரண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கும், துணை அதிபர் கமலா ஹாரிஸூக்கும் வழங்கப்பட இருக்கிறது. இதற்கான நிகழ்ச்சி சென்னை அடையாறில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விஜிபி ரவிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் கவிஞர் வைரமுத்து பேசியதாவது - இதுவரை ஏற்றுமதியில் பொருட்களை தான் செய்து வந்தோம். ஆனால், இப்போது அறிவை ஏற்றுமதி செய்கிறோம். மேலும், குஜராத்தியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் திருக்குறளை மேற்கோள் காட்டும்போது நாம் மகிழ்ச்சியடைகிறோம்.
நாம் தமிழன் என்று பெருமை கொள்கிறோம். ஒட்டுமொத்த தமிழ் இனமும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றால், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும். திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க, பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும். திருக்குறளை யாருமே அங்கீகரிக்கவில்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளைக் கடந்து திருக்குறள் நிற்கிறது, திருக்குறள் அதிகாரத்தைக் காப்பாற்ற ஆசைப்படவில்லை. அறத்தைக் காப்பாற்றவே ஆசைப்படுகிறது
இவ்வாறு அவர் பேசினார்.