நீண்ட காவிரி கரையும்....Rockfort மலையும்....திருச்சியை பத்தி தெரிஞ்சிக்கலாம் வாங்க
காவிரி கரையோரம் அமைந்திருக்கும் Rockfort நகரமான திருச்சியின் வரலாற்றை குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
பெயர் காரணம்
காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சி எனப்படும் திருச்சிராப்பள்ளி மிகவும் பழமை பெற்ற தொன்மை வாய்ந்த நகரமாகும்.சங்க காலத்தில் முற்கால சோழர்களின் தலைநகரமாக இந்த நகரம் திகழ்ந்துள்ளது.
திருச்சிராப்பள்ளி என்ற பெயர் திரிஷிராபுரம் என்ற சம்ஸ்கிருத வார்த்தையிலிருந்து தோன்றியதாகப் நம்பப்படுகிறது. திரிஷிரா என்றால் மூன்று தலை, புரம் என்றால் ஊர். இந்து சமயப் புராணங்களில் 'திரிசிரன்' என்ற பெயருடைய மூன்று தலைகள்கொண்ட அரக்கன், இவ்வூரில் சிவபெருமானைப் பூசித்துப் பலனைடைந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் இவ்வூருக்கு அந்த அரக்கனின் திருப்பெயராலே "திரிசிரன் பள்ளி" என்பதைத் தழுவித் திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் ஏற்பட்டதாக கருத்து நிலவுகிறது.
வரலாறு
5-ஆம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழும் பின்னர், 6-ஆம் நூற்றாண்டில் தென்இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மனின் ஆட்சியில் இருந்ததாக கூறப்படுகிறது. பல்லவர்களின் வீழ்ச்சிக்குப் பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13-ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.
சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின், இந்நகரம் பாண்டியர்களின் ஆளுமைக்கும் பின்ன 1311-ஆம் ஆண்டு மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரைக் கைப்பற்றி ஆட்சி மேற்கொண்டுள்ளார். முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு விஜயநகர பேரரசின் கீழ் வந்த இந்நகரம், பின்பு மதுரை நாயக்கர்களின் ஆட்சியர்கள் வசம் இருந்துள்ளது.
பொருளாதாரம்
ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில் திருச்சிராப்பள்ளியில் எண்ணெய் செக்குகள், தோல் தொழில் மற்றும் சுருட்டு தயாரிப்பிற்குப் புகழ் பெற்று விளங்கியிருக்கிறது. பதப்படுத்தப்பட்ட தோல்கள் இந்நகரில் இருந்து ஐக்கிய இராச்சியத்திற்கு ஏற்றுமதி ஆயின.
திருச்சி நகரில் ஏராளமான சில்லறை மற்றும் மொத்த வணிகக் கூடங்கள் அமைந்துள்ளன.அதில் மகாத்மா காந்தி சந்தை எனப்படும் காய்கறி சந்தை மிகவும் பிரபலமானதாகும். திருவரங்கத்தில் உள்ள பூக்கடைத் தெருவும் மாம்பழச்சாலையின் மாம்பழச் சந்தையும் குறிப்பிடத்தக்க மார்க்கெட் பகுதிகளாகும். திருச்சியை ஒட்டியுள்ள மண்ணச்சநல்லூரில் அரிசி ஆலைகளில் பொன்னி அரிசி தயாராகி மாநிலம் முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.
இந்நகரில் அமைந்துள்ள மத்திய அரசின் துப்பாக்கித் தொழிற்சாலையில் இருந்து தான் இந்திய படைத்துறைக்காக குண்டுகள், துப்பாக்கிகள் போன்றவை தயாரிக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன.
அதே போல திருச்சி பொன்மலையில் ரயில்களின் பணிப்பட்டறை அமைந்துள்ளது. மேலும் BHEL நிறுவனம் போன்ற அரசு நிறுவனங்களும் இந்த மாவட்டத்தில் தான் அமைந்துள்ளது. இந்நகரம் Energy Equipment & Fabrication Capital of India என்று அழைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
கல்லணை
தமிழ்நாட்டிலுள்ள உலக பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணை கரிகால் சோழனால் முதலாம் நூற்றாண்டில் காவிரி ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இந்த அணை தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் உள்ள கல்லணை - தோகூர் கிராமத்தில் அமைந்துள்ளது.திருச்சியில் காவிரி ஆற்றின் முக்கொம்பில் வடபுறமாக கொள்ளிடம், தென்புறமாக காவிரி என இரண்டாகப் பிரிகிறது. இவ்விடத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் மேலணை கட்டப்பட்டுள்ளது.
காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் இடையில் திருவரங்கம் ஆற்றுத்தீவு உள்ளது. அங்கிருந்து காவிரி ஆறு கிளை கல்லணையை வந்தடைகிறது. அங்கு காவிரி ஆறானது உள்ளாறு (கொள்ளிடம்), காவிரி, வெண்ணாறு, புது ஆறு என 4 ஆகப் பிரிகிறது. உள்ளாறு (கொள்ளிடம்) மீண்டும் கொள்ளிடத்தில் இணைகிறது. காவிரி இவ்வாறு பிரியுமிடத்தில்தான் கல்லணை கட்டப்பட்டுள்ளது.
கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, மற்றும் உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. கல்லும் களிமண்ணும் மட்டுமே சேர்ந்த ஓர் அமைப்பு 1900 ஆண்டுகளுக்கு மேலாக காவிரி வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தி வருவது அதிசயமே ஆகும்.
ஆடிப்பெருக்கு
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான ஆடி மாதம், 18 ஆம் தேதியன்று காவிரி நதிக் கரையோரம், குடும்பப் பெண்கள், சுமங்கலிப் பெண்கள், புதிதாகத் திருமணமான பெண்கள், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தங்கள் குடும்பங்களுடன் சென்று பூஜைகள் செய்து, தங்களின் குடும்ப நலனுக்காக காவிரித்தாயை வணங்குவார்கள்.
காவிரித்தாய்க்குப் நன்றி சொல்லி கொண்டப்படும் இந்த பண்டிகையில் காவிரி நதிக்கரையில், சர்க்கரைப் பொங்கல் மற்றும் வெண்பொங்கல் தயார் செய்து படையல் செய்து இறையருள் பெற பெண்கள் வழிபடுவார்கள்.
மலைக்கோட்டை
மலைக்கோட்டை திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை பழங்கால மலைப்பாறைகளின் ஒன்றாகும். இவற்றில் கோட்டை கோயில்கள் போன்றவை உள்ளன.முதன்முதலாக விஜயநகர பேரரசுவால் பாதுகாப்பு கோட்டையாக பயனப்டுத்தப்பட்ட இது நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இந்த கோட்டை அமைந்துள்ள மலைப்பாறை 273 அடி உயரம் கொண்டது. இம்மலைக் கோட்டையுள் அமைந்துள்ள கோயில்கள் உச்சிப் பிள்ளையார் கோயில், சிவன் கோயில்கள் ஆகும். இதற்குள் பல்லவர் காலக் குடைவரைக் கோயில் ஒன்றும், நாயக்கர் காலக் கோட்டை ஒன்றும் உள்ளன. இக்கோட்டை, நாயக்கர்களுக்கும் பிஜாப்பூர், கர்நாடகம், மராத்திய ஆகிய அரசுகளுக்கும் இடையே இடம்பெற்ற பல போர்களைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மலைக்கோட்டையில் தான் உச்சிபிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இந்நகரை சுற்றி ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், சமயபுரம் கோவில், உறையூர் பஞ்சவர்ண சுவாமி கோவில் போன்ற பல கோவில்களும் அமைந்துள்ளன. அனைத்து இந்திய நகரங்களை போலவே இந்நகரில் மசூதிகளும், கிறிஸ்தவ தேவாலயங்களும் அதிகளவில் அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.