பிரதமர் மோடியை வறுத்தெடுத்த டைம் பத்திரிகை.! என்ன சொல்லியிருக்கிறது?

By mohanelango May 29, 2021 01:03 PM GMT
Report
Courtesy: TIME

மோடி இந்தியாவுக்கு தேவையான தடுப்பூசிகளை உறுதி செய்யவில்லை. அதற்கான விலையை உலகமே கொடுக்கிறது என டைம் பத்திரிகை கடுமையாக சாடியுள்ளது.

அந்த கட்டுரையில் கூறியிருப்பவை:

‘கொரோனாவில் கோரத்தாண்டவத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவின் நிலைமையை தடுப்பூசி தட்டுப்பாடு மேலும் மோசமாக்கியுள்ளது. 3.15 லட்சம் பேர் கொரோனாவால் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவித்தாலும் 10 லட்சம் பேர் வரை இறந்திருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்காவில் முகாமிட்டுள்ளார்.

உலகத்திற்கே தடுப்பூசி வழங்கும் விஷ்வகுருவாக இருந்த இந்தியா மிக குறுகிய காலத்திற்குள் உலக நாடுகளிடம் தடுப்பூசி கேட்டு பெறும் நிலைக்கு வந்துவிட்டது. உலக நாடுகள் தங்களுடைய தேச நலனைத் தாண்டி சர்வதேச நலனை சிந்தித்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி பெருமையாக பேசிக் கொண்டிருந்தார்.

ஆனால் இந்தியாவின் தடுப்பூசி தேசியவாதமும் பிரதமர் மோடியின் வெற்று தோரணைகளும் ஏற்படுத்தியுள்ள இந்த எதிர்பாராத தடுப்பூசி தட்டுப்பாடு இந்தியாவை மட்டுமல்லாது தடுப்பூசிக்காக இந்தியாவை சார்ந்திருக்கும் நாடுகளையும் பேராபத்தில் சிக்க வைத்துள்ளது. 

பிரதமர் மோடியை வறுத்தெடுத்த டைம் பத்திரிகை.! என்ன சொல்லியிருக்கிறது? | Time Magazine Roasts Modi Over Covid Management

இந்தியா தன்னுடைய மக்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதற்காக ஏற்றுமதிக்கு முற்றிலுமாக தடை விதித்துவிட்டது. இதனால் உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளை பிரித்து வழங்கும் ஐ.நாவின் கோவேக்ஸ் திட்டத்திற்கு தடுப்பூசி கிடைப்பதும் பெரும் சிக்கலில் உள்ளது. பெரும்பாலான ஏழை நாடுகள் இந்தத் திட்டத்தை நம்பித்தான் இருக்கின்றன.

2020 ஆகஸ்டிலே தடுப்பூசி திட்டம் தயார் என அறிவித்த மோடி தடுப்பூசிகளுக்கான முதல் ஆர்டரை ஜனவரி 2021-ல் தான் பெற்றது. கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் நிறுவனம் கோவேக்ஸ் திட்டத்திற்கு இந்த ஆண்டிற்குள் 200 கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டியுள்ளது. ஆனால் தற்போது ஏற்றுமதி தடைபட்டுள்ளதால் அது சாத்தியமற்றதாகிவிட்டது. சீரம் நிறுவனத்தின் தலைவர் அதார் பூனாவாலா லண்டனுக்கு சென்றுவிட்டார்.

இந்தியாவின் அண்டை நாடுகளாக நேபால், வங்கதேசம் மற்றும் இலங்கையிலும் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நாடுகள் இந்தியாவை நம்பித்தான் இருந்தன. உள்நாட்டில் வழங்கியதை விட வெளிநாடுகளுக்கு தான் அதிக தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம் என ஐ.நாவில் இந்தியா பெருமைபட பேசியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். 

சீரம் நிறுவனத்துக்கு இந்திய அரசு எந்த விதமான உதவியும் வழங்கவில்லை. இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கிய போது வெறும் 1.6 கோடி தடுப்பூசிகளை மட்டுமே இந்திய அரசு ஆர்டர் செய்திருந்தது. கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகமாக தொடங்கிய போது தான் ஆர்டர்களை அதிகப்படுத்தியது.

பிரதமர் மோடியை வறுத்தெடுத்த டைம் பத்திரிகை.! என்ன சொல்லியிருக்கிறது? | Time Magazine Roasts Modi Over Covid Management

ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கடந்த நவம்பர் மாதமே தங்களுடைய தேவைக்கும் அதிகமாக 70 கோடி தடுப்பூசிகளை முன்பதிவு செய்து வைத்திருந்தன. தடுப்பூசி பெறுவதில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைய தான் கோவேக்ஸ் திட்டம் உருவாக்கப்பட்டது. அதில் சீரம் நிறுவனம் தான் முக்கியமான பங்கு வகிக்க இருந்தது.

தற்போது அந்த நம்பிக்கை சிதைந்துபோய் உள்ளது. தடுப்பூசிக்கான குளறுபடிகள் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. மொத்தமாக கொள்முதல் செய்து இலவசமாக தடுப்பூசி செலுத்துவதை தவிர்த்து மோடி அரசு மாநில அரசுகளை தடுப்பூசி வாங்கிக் கொள்ள பணித்துவிட்டது. தனியார் சந்தைகளிலும் தடுப்பூசிகளை விற்க அனுமதிக்கப்பட்டுள்ளதால் தாறுமாறாக தடுப்பூசிகளின் விலையும் ஏறி வருகிறது.

உலகிலேயே உயிர்காக்கும் தடுப்பூசிகள் விற்கப்படுவது அதுவும் வெவ்வேறு விலைக்கு விற்கப்படுவது இந்தியாவில் மட்டும்தான். மோடியின் சொல் இருந்த இடத்தில் செயல் இல்லை. முதலில் தன் நாட்டு மக்களை பேராபத்தில் சிக்க வைத்ததோடு மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகளையும் கடும் நெருக்கடியில் தள்ளியுள்ளார் மோடி” என மிகக் கடுமையாக சாடியுள்ளது டைம் பத்திரிகை.

நன்றி: டைம் பத்திரிகை