திருமணம் நின்றதால் மன உளைச்சல் - டிக்டாக் புகழ் அபிராமியின் தம்பி தற்கொலை
டிக்டாக் புகழ் அபிராமியின் தம்பி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை பகுதியை சேரந்த டிக்டாக் செயலி மூலம் பிரபலமான அபிராமி என்பவர், கடந்த 2018ம் ஆண்டு கள்ளக்காதல் விவகாரத்தில் தனது 2 குழந்தைகளையும் பாலில் தூக்க மாத்திரை கொடுத்து கொடூரமான முறையில் கொலை செய்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதனிடையே மாங்காடு அடுத்த பெரிய பணிச்சேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பெற்றோருடன் அபிராமியின் தம்பி பிரசன்னா மணிகண்டன் வசித்து வந்தார். இவர் பெரம்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில் சமீபத்தில் இருதரப்பு பெற்றோரும் இவர்களுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தனர்.
ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் அபிராமி விவகாரம் பெண் வீட்டாருக்கு தெரியவந்ததால் திருமண ஏற்பாடுகள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த பிரசன்னா நேற்று முன்தினம் அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாங்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.