லட்சக்கணக்கில் மோசடி செய்த டிக்டாக் தம்பதி கைது - ஆந்திராவில் பரபரப்பு
ஆந்திராவில் டிக்டாக் புகழ் தம்பதி பணமோசடிப் புகாரில் சிக்கி கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் கோகவரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீதர் காயத்ரி தம்பதிடிக்டாக்கில் பல பாடல்களுக்கு சேர்ந்து நடனம் ஆடியதால் அந்தப் பகுதியில் பிரபலமாகி விட்டனர். ஸ்ரீதர், பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் நிலையில், காயத்ரி பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.
இதனிடையே ஏலுாரைச் சேர்ந்த கெளரிசங்கர் என்பவர் தனது மகளுக்கு வெளிநாட்டு மருத்துவக் கல்லுாரியில் படிக்க இடம் வாங்கித்தர வேண்டும் என இந்த தம்பதியிடம் உதவி கேட்டுள்ளார். அதற்கு இவர்கள் செர்பியா நாட்டின் பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் இடம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.44 லட்சம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால் சொன்னபடி படிக்க இடமும் வாங்கித் தராமல் பணத்தையும் திருப்பித் தராமல் மோசடி செய்துள்ளனர். இதேபோல் அரிசி ஆலை தொடங்குவதற்கு தங்கள் அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி வங்கியில் கடன் வாங்கித் தருவதாகக் கூறி 4 பேரிடம் இருந்து தலா ரூ.4 லட்சம் இந்த தம்பதி பறித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் மருத்துவப் படிப்புக்கு இடம் வாங்கித் தருவதாக் கூறிய விஷயத்தில் என்ன நடந்தது என காயத்ரியின் பேஸ்புக் பக்கத்தில் சில தகவல்கள் வெளியிடப்பட்டது. அதில் பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்றுத் தர ரூ.16 லட்சம் பெற்று பல்கலைக்கழகத்தில் செலுத்தி விட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பெல்கிரேட்டில் அந்த மாணவி தனது குடும்பத்துடன் தங்க, காயத்ரி தம்பதி ஏற்பாடு செய்து தந்து விசாவும் வாங்கிக் கொடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட மாணவி, தனது குடும்பப் பிரச்னையால் பெல்கிரேட் செல்லாமல் தவிர்த்து விட்டதாகவும் அதற்குத் தாங்கள் பொறுப்பல்ல என்றும் அந்தத் தகவலில் கூறப்பட்டுள்ளது.
அதேசமயம் சம்பந்தப்பட்ட மாணவியின் தந்தை, தங்களுக்கும் காயத்ரி தம்பதிக்கும் பணம் தொடர்பாக எவ்வித பிரச்னையும் இல்லை என எழுதிக் கொடுத்ததாகவும் குறிப்பிடப்பட்டு அந்தக் கடிதமும் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.