காவல் நிலையம் முன் தீக்குளிக்க முயன்ற டிக் டாக் பிரபலம் சூர்யா தேவி கைது..!
டிக் டாக்கில் பிரபலமாக இருந்து வரும் மணப்பாறையைச் சேர்ந்த சூர்யாதேவி, காவலர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உறவினர்கள் மீது புகார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை முனியப்பன் கோயில் பகுதியில் வசித்து வருபவர் மருதுபாண்டி மனைவி சூர்யாதேவி (28).
இவர் சர்ச்சைக்குரிய விஷயங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் கடந்த புதன்கிழமை தனது தம்பி தேவா மற்றும் கணவர் மருதுபாண்டி ஆகியோர் தன்னை தலையில் அடித்து காயப்படுத்தியதாக மணப்பாறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதேபோல தேவாவின் மனைவி கீர்த்திகா, சூர்யாதேவி மேல் பதிலுக்கு புகார் அளித்திருந்தார். இந்த புகாரின்பேரில் விசாரணைக்காக வியாழக்கிழமை இருதரப்பினரும் காவல்நிலையத்தில் ஆஜரானபோது, மதுபோதையில் வந்திருந்த சூர்யாதேவி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் சென்று விட்டார்.
சூர்யா தேவி கைது
அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை மீண்டும் காவல் நிலையம் வந்த சூர்யாதேவி, போலீஸாரை ஒருமையில் திட்டி, கூச்சலிட்டு ரகளையில் ஈடுபட்டார்.
மேலும், மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து தன் மேல் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு எரித்துக் கொள்வதாக போலீஸாரை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பணியில் இருந்த தலைமைக் காவலர் லாரன்ஸ் அளித்த புகாரின்பேரில், காவலர்களை அரசு பணியைச் செய்ய விடாமல் தடுத்து தகாத வார்த்தையால் திட்டி, மிரட்டியதாக மணப்பாறை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், நேற்று மாலை சூர்யாதேவியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர்.