அமைச்சர் துரைமுருகனின் அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும்: எதிர்க்கும் பூவுலகின் நண்பர்கள்

tamilnadu desert ministerduraimurugan
By Irumporai Sep 09, 2021 10:04 AM GMT
Report

தமிழக சட்டப் பேரவையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசும் போது நீதிமன்ற உத்தரவுப்படி சுற்றுசூழல் அனுமதி, மண் பரிசோதனைக்கு பிறகே மண் எடுக்க வேண்டும் என சூழல் இருந்த நிலையில் தமிழக அரசு சார்பில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசு சார்பில் எடுக்கப்படும் மணலுக்கு சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என கடந்த ஜூலை 30ல் வெளியிடப்பட்டது.

தற்போது மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் மண் எடுக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அதற்காக தமிழக அரசு ஒரு புதிய முடிவு எடுத்திருக்கிறது. அதன்படி, 1.5 அடிக்கு கீழ் செல்லாமல் மணல் எடுப்பது, கனிமவளங்களை எடுப்பது குற்றம் ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மண் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

எனவே மண்பாண்ட தொழிலாளர்கள், செங்கல் சூளை வைத்திருப்பவர்கள் சுற்றுசூழல் அனுமதியின்றி 1.5 மீட்டர் வரை மண் எடுத்துக்கொள்ளலாம். அதற்கான கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் துரைமுருகனின் இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பூவுலகின் நண்பர்கள் அமைப்பினை சேர்ந்த சுந்தர் ராஜன் தனது ட்விட்டர் பதிவில் :

சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் ஆற்று மணல் எடுக்கலாம் என்று அமைச்சர் துரைமுருகன்அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உலகெங்கிலும் உள்ள நீர்நிலைகளில் இருக்கின்ற தண்ணீரைவிட ஆற்று மணலில் உள்ள நீரின் அளவு அதிகம்.

காலநிலை மாற்றம் மழைப்பொழிவை தீவிரமாக்கும் இந்த தருணத்தில் நிலத்தடி நீரைபாதுகாப்பது அவசியம்,அதில் மணல் முக்கிய பங்காற்றுகிறது. ஏற்கனவே நடைபெற்ற மணல் கொள்ளையை சரி செய்யவே பலநூறாண்டுகள் ஆகிவிடும் என்று தெரிவித்து வந்த நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழ்நாட்டை பாலைவனமாக்கி விடும் எனபது உறுதி. இந்த முடிவை கைவிட வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.