அம்பேத்கர் உருவத்திற்கு காவி உடை, நெற்றியில் விபூதி அடித்து போஸ்டர் - இந்து முன்னணி பிரமுகர் மீது குண்டர் சட்டம்
அம்பேத்கர் உருவத்திற்கு காவி உடை அணிவித்து, நெற்றியில் விபூதி பட்டை, குங்குமம் இட்டு போஸ்டர் ஒட்டி தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்து முன்னணி பிரமுகர் குருமூர்த்தி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பேத்கர் உருவத்திற்கு காவி உடை
கும்பகோணம் பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்த தர்மராஜன் மகன் குரூமூர்த்தி (42), இந்து மக்கள் கட்சி மாநிலச் செயலாளரான இவர், கடந்த டிசம்பர் 6ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி அம்பேத்கர் உருவத்திற்கு காவி உடை அணிவித்தும், நெற்றியில் விபூதி பட்டை, குங்குமம் ஆகியவற்றை இட்டும் போஸ்டர் அடித்து கும்பகோணம் மாநகரம் முழுவதும் ஒட்டியிருந்தார்.
இது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதனையடுத்து உடனடியாக போலீஸார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பாய்ந்தது குண்டர் சட்டம்
இந்த நிலையில் அவர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா காந்தபுனேனி பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், அவரை, குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து போலீஸார், கும்பகோணம் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை கைது செய்து, திருச்சி மத்திய சிறைக்கு கொண்டுசென்று அடைத்தனர்.