பீகாரில் 3 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை : தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் அதிரடி அறிவிப்பு
2014 மக்களவை தேர்தலில் தனது தேர்தல் வியூகத்தால் பாஜக-வை வெற்றி பெற செய்ய வைத்தது தொடங்கி 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வரை பல கட்சிகளுக்கு தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டுபவர் பிரசாந்த் கிஷோர்.
இவர் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பான தனது பரிந்துரைகளை அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் சேர பிரசாந்த் கிஷோருக்கு அழைப்பு விடுத்ததாகவும், அதனை அவர் மறுத்துவிட்டதாகவும் காங்கிரஸ் தரப்பு விளக்கம் தெரிவித்தது.

இந்நிலையில் ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள பங்கேற்பாளராக இருப்பதற்கும், மக்கள் சார்பான கொள்கையை வடிவமைக்க உதவுவதற்குமான எனது தேடலானது 10 வருட (பிரதமர் மோடி தலைமையிலான அரசு) ரோலர்கோஸ்டர் சவாரிக்கு வழிவகுத்தது என அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த பிரஷாந்த் கிஷோர்,
தற்போது மக்களிடம் தான் நேரடியாக செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. நல்லாட்சி என்ற முழக்கத்துடன் மக்களை சந்திக்க உள்ளேன் எனவும் பதிவிட்டுள்ளார். மேலும், பீகார் மாநிலத்தை மையமாக வைத்து அரசியல் கட்சியை பிரசாந்த் தொடங்க வாய்ப்பு என தகவல் வெளியானது.

இந்நிலையில், புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றிய பரபரப்பு யூகத்திற்கு பதிலளிக்கும் வகையில் இன்று அவர் பேசியுள்ளார்.
தனது சொந்த மாநிலம் பீகாரில் புதிய திட்ட நடைமுறையை கொண்டு வருவதற்காக தன்னையே அர்ப்பணிப்பேன் என கூறியுள்ளார். வருகிற அக்டோபர் 2ந்தேதியில் இருந்து 3 ஆயிரம் கி.மீ. பாதயாத்திரை செல்வேன் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கடந்த 15 ஆண்டுகளாக பீகாரில் வளர்ச்சி இல்லை. நிலவி வரும் யூகங்களின்படி, அரசியல் கட்சி எதனையும் நான் இன்று அறிவிக்க போவதில்லை. பீகாரில் மாற்றம் கொண்டு வரவிரும்பும் அனைவரையும் ஒன்று சேர்ப்பதே எனது நோக்கம்.
வருங்காலத்தில், அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற அவசியம் எங்களுக்கு ஏற்பட்டால், அதுபற்றி வருங்காலத்தில் முடிவு செய்வோம். அப்போது, அது பிரசாந்த் கிஷோரின் கட்சியாக இருக்காது. அது மக்களின் கட்சியாக இருக்கும் எனவும் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பீகார் முதலமைச்சர் நிதீஷை தனது தந்தை போன்றவர் என கூறிய கிஷோர், அதனால் எனக்கு தனியான அரசியல் பயணம் இருக்க முடியாது என்ற அர்த்தமில்லை என்றும் கூறியுள்ளார்.