தமிழக மக்களே எச்சரிக்கையாக இருங்கள் - அடுத்த 3 நாட்களுக்கு காத்திருக்கும் சம்பவம்
தமிழகத்தில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் வெப்பநிலை அதிகரிக்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக கோடைகாலத்தில் தான் வெப்பநிலை அதிகமாக இருக்கும். குறிப்பாக ஏப்ரல் இறுதி தொடங்கி மே மாதம் முழுவதும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் பொதுமக்களை உண்டு இல்லை என்றாக்கி விடும்.
ஆனால் மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக வழக்கத்தை விட முன்னதாக மார்ச் மாதமே வெயில் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது. குறிப்பாக சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனிடையே உள் தமிழகப் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மார்ச் 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ்நாட்டில் லேசாக உள்மாவட்டங்களில் மட்டும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து தமிழகத்தில் வெப்பநிலை படிப்படியாக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் 3 நாட்கள் (ஏப்ரல் 1 முதல் 3 வரை) வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. எனவே பொதுமக்கள் பகலில் அதிகம் வெளியில் செல்வதை தவிர்த்து உடலை குளிர்ச்சியாக வைக்கும் நீர், குளிர்பானங்கள் அருந்துமாறு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.