ஹிஜாப் அணிந்த பெண் மருத்துவருக்கு மிரட்ட விடுத்த பாஜக பிரமுகரை தண்டிக்க வேண்டும் - ஜவாஹிருல்லா கோரிக்கை
ஹிஜாப் அணிந்த மருத்துவரை மிரட்டியவரைச் சட்டத்தின் அடிப்படையில் கடுமையாக தண்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.
ஜவாஹிருல்லா அறிக்கை
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகை மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று பணியிலிருந்த முஸ்லீம் பெண் மருத்துவர் ஹிஜாப் அணிந்திருந்தார் என்ற காரணத்தால் பாஜகவைச் சேர்ந்த புவனேஸ்வர ராம் என்பவர் தகராறில் ஈடுபட்டார் என செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
இரவு நேரத்தில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்ட நோயாளி ஒருவரைப் பரிசோதித்த முஸ்லிம் பெண் மருத்துவர், நோயின் தீவிரத்தை அறிந்து உடனே நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவை சேர்ந்த புவனேஸ்வர ராம் இரவு நேரப் பணியிலிருந்த பெண் மருத்துவரிடம் வாக்குவாதம் செய்வது போன்ற காணொளி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒரு பெண் மருத்துவரிடம் இதுபோன்ற வெறுப்பு பேச்சைப் பேசுவதும், அவர் ஹிஜாப் அணிந்திருந்த காரணத்தால் அவரை மிரட்டுவதும் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்தும் செயலாகும்.
மேலும், மருத்துவர்கள், மருத்துவ சேவைப் பணியாளர்கள் மத்தியில் அமைதியின்மையை உருவாக்கி, அப்பகுதியின் சமூக நல்லிணக்கதை சீர்குலைக்கும் நோக்கத்தில் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டுள்ளது.
எனவே, பெண் மருத்துவரை மிரட்டிய நபரை தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ சேவை நிறுவனங்கள் (வன்முறை மற்றும் சேதம் அல்லது சொத்து இழப்பு) சட்டம் 48/2008ன் கீழ் மற்றும் மத ரீதியான வெறுப்பு பேச்சுகளைப் பேசி பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படுத்த முயன்ற காரணத்தின் கீழாகவும், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.