ரயில்கள் மூலம் ஒரே நாளில் ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் விநியோகம்
எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது.
இதனை சரி செய்ய மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் என அனைவரும் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர்.

அதேசமயம் ஆக்ஸிஜனை விரைவாகக் கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதற்காக, ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில்களை இயக்குவதற்கு புதிய வரையறைகளை இந்திய ரயில்வே உருவாக்கி வருகிறது.
இதுவரை 175 எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் தமிழகத்திற்கு 350 மெட்ரிக் டன்னும், மகாராஷ்டிராவிற்கு 521 மெட்ரிக் டன்னும், உத்தரப்பிரதேசத்திற்கு 2858 மெட்ரிக் டன்னும், மத்தியப்பிரதேசத்திற்கு 476 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு 1427 மெட்ரிக் டன்னும், தெலங்கானாவிற்கு 565 மெட்ரிக் டன்னும்,
ராஜஸ்தானிற்கு 40 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு 480 மெட்ரிக் டன்னும், உத்தராகண்டிற்கு 200 மெட்ரிக் டன்னும், பஞ்சாப்பிற்கு 81 மெட்ரிக் டன்னும், கேரளாவிற்கு 118 மெட்ரிக் டன்னும், டெல்லிக்கு சுமார் 3794 மெட்ரிக் டன்னும் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 800 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு சேர்க்கப்பட்ட நிலையில் இதுவரை இல்லாத அளவில் 1000 மெட்ரிக் டன் ஆக்சிஜன் நேற்று ஒரே நாளில் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.