தற்கொலை செய்ய போவதாக டவரில் ஏறிய நபர் - கால் நடுங்கி இறக்கி விடுங்க என கதறல்! கஜினியின் பின்னணி என்ன?
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த வள்ளியம்மாள் புரத்தைச் சேர்ந்த லிங்கதுரை, ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.
வேலைக்கு செல்லாமல் சும்மாவே சுற்றி வந்த லிங்கதுரையை அவரது மனைவி பானுமதி வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார். இதையடுத்து, மனைவி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார் என வேதனையில், காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் மீது போலீசார், நடவடிக்கை எடுக்காததால், எனக்கு நீதி வேண்டும் என கூச்சல் போட்டு கொண்டிருந்தார். இந்த கூச்சல் சிறுதி நேரத்தில் விரக்தியாக மாறி, சாத்தான்குளம் வாரச்சந்தை அருகே இருக்கும் செல்போன் டவரின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டியுள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புதுறை வீரர்கள், லிங்கதுரையிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து, மனம் இறங்கி அவர் கீழே இறங்க முற்பட்டபோது, பயத்தில் அவருக்கு கை, கால்கள் நடுங்கியுள்ளது. இதனால் அஞ்சி நடுங்கிய அவர், ஒரு வேகத்தில் ஏறிவிட்டேன், எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்.. எனக்கு பயமாக இருக்கிறது என கூச்சலிட்டுள்ளார்.
இதையடுத்து தீயணைப்பு துறையினர், லிங்கதுரையை டவரில் இருந்து பத்திரமாக கீழே இறக்கினர். கீழே வந்ததும் மனைவி தன்னை வீட்டை விட்டு வெளியேற்றினாலும் மனைவி மீதும் குடும்பத்தினர் மீதும் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் என்று சட்டையை கழற்றி காட்டினார்.
இதில் அவர் கஜினி சூர்யாவை போன்று, உடல்
முழுவதும் மனைவியின் பெயரும் குடும்பத்தினரின் பெயரும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இதையடுத்து அவரை குடும்பத்துடன் சேர்க்க முயற்சிப்பதாக
போலீசார் கூறியுள்ளனர். மேலும் லிங்கதுரையை வேலைக்கு போக சொல்லி அறிவுரை வழங்கியுள்ளனர்.