தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை - மு.க.ஸ்டாலின் உறுதி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக அரசு வேலை கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் தகுதி அடிப்படையில் வேலை வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி சிதம்பர நகரில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது, “எந்த நிலையிலும் உங்களோடு நான் இருப்பேன். 50 ஆண்டுகளாக மக்கள் பணி செய்து வருகிறேன். கோவில்பட்டியில் திமுக வேட்பாளரை எதிர்த்து நிற்பவா்கள் டெபாசிட் வாங்கக் கூடாது. கலைஞர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஏற்கனவே பல நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருக்கிறார்.
இதுபோன்று திட்டங்களை சொல்லி தமிழக மக்களிடம் எடப்பாடி பழனிச்சாமி வாக்குகள் கேட்க முடியுமா? ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக காந்திய வழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தமிழக அரசுதான். மத்திய பாஜக அரசும் தமிழக அரசும் இணைந்து திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது. இந்த துப்பாக்கிச் சூட்டின்போது, நான் தூத்துக்குடிக்கு வந்திருக்கிறேன். அப்போது தூத்துக்குடியை கலவர பூமியாக காட்சி அளித்துள்ளது.
ஆனால் முதல்வர் பழனிசாமியிடம் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்படியா நான் டிவியில் தான் பார்த்தேன் எனக்கு தெரியாது என்றார். துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அதிமுக அரசு தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இவர்களுக்கு தகுதி அடிப்படையில் வேலை கொடுக்கப்படும். ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு குறித்து சிபிஐ விசாரணை முறையாக நடக்கவில்லை. பாஜக அரசு சிபிஐயை முடக்கி வைத்திருக்கிறது.
ஒரு நபர் விசாரணை ஆணையம் இதுவரை விசாரணை குறித்து அறிக்கை கொடுக்கவில்லை.
அதிமுக ஆட்சியில் சாத்தான்குளத்தில், தந்தை மகனை இந்த அரசு அடித்துக் கொலை செய்துள்ளது. ஆனால் முதலமைச்சர் பழனிசாமி காவல்துறையினர் தாக்கியதில் அவர்கள் உயிரிழக்கவில்லை அவர்களுக்கு ஏற்கனவே உடல்நலக்குறைவு இருந்தது” என்றார்.