‘ஒரு தாயின் அறப்போர் வென்றது’ - பேரறிவாளன் விடுதலை குறித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு தொடர்பு இருந்ததாக பேரறிவாளன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவில், தான் நீண்ட நாள்களாக சிறையில் இருக்கிறேன், சிறையில் எனது நடத்தை மற்றும் நன்னடத்தை எல்லாம் சரியாக இருக்கிறது. பெல்ட் வெடிகுண்டுவில் பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கி கொடுத்தது நான் தான் என்பதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை அதனால் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
மத்திய அரசு இந்த வழக்கில் தாமதப்படுத்தியதை அடுத்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து ஜாமீன் வழங்கி இருந்தது. ஆளுநர் முடிவெடுக்காத விவகாரத்தை ஜனாதிபதிக்கு அனுப்புவது தவறு என நீதிபதிகள் கூறியிருந்தனர். பேரறிவாளன் வழக்கு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை மத்திய அரசிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர். மேலும் இந்த வழக்கில் இருந்து பேரறிவாளனை நாங்களே ஏன் விடுதலை செய்யக் கூடாது எனவும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
அதன்பின்பு இந்த வழக்கு பேரறிவாளனின் விடுதலையை ஒட்டிய வழக்காக மாறியது. இந்த வழக்கில் ஆளுநரின் காலதாமதம் மற்றும் அவர் இந்த விவகாரத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது இவை இரண்டுமே அரசியல் சாசன ரீதியிலான பிழையாக பார்கிறோம் என்று கூறிய நீதிபதிகள், ஏன் இந்த வழக்கில் நாங்களே தலையிட்டு விடுதலை செய்யக்கூடாது என கேட்டிருந்தனர்.
இதையடுத்து தான் இன்று உச்ச நீதிமன்றம் சட்டப்பிரிவு 142 ஐ பயன்படுத்தி விடுதலை அளித்து தீர்பளித்துள்ளது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு தீர்பளித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், பேரறிவாளன் விவகாரத்தை மீண்டும் ஆளுநர் பரிசீலனைக்கு அனுப்ப விரும்பவில்லை என தெரிவித்த நீதிமன்றம், பேரறிவாளனை விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்காமல் தாமதித்த ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்தது.
மேலும், மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரம் இல்லை, ஆளுநர் காலதாமதம் செய்ததாலேயே உச்சநீதிமன்றம் இந்த முடிவை எடுத்துள்ளதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை விடுதலை செய்வதாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்வு தெரிவித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு தாயின் அறப்போர் வென்றது. அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி.
— Thol. Thirumavalavan (@thirumaofficial) May 18, 2022
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள். pic.twitter.com/kTdNauj8IU
அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், "ஒரு தாயின் அறப்போர் வென்றது; அற்புதம் அம்மாளின் உறுதிமிக்க, இடையறாத, சட்டவழியிலான நெடும்போருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. அனைத்து சனநாயக சக்திகளின் நல்லாதரவு மற்றும் தமிழக அரசு நல்கிய ஒத்துழைப்பால் விளைந்த நீதி: உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நேர்மைத்திறத்துக்கு எமது பாராட்டுகள்." என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.