இந்த அசத்தல் வெற்றிக்கு இவுங்க தான் காரணம் - கே.எல்.ராகுல்
ஜிம்பாப்வே அணியுடனான ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய இந்திய அணி
ஜிம்பாப்வே அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி மூன்று ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இந்த ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று ஜிம்பாப்வே நாட்டில் உள்ள ஹராரே மைதானத்தில் நடைபெற்றது.
இந்த தொடரின் இந்திய அணி கேப்டனான கே.எல்.ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
40.3 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 189 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்தது.
அதிகபட்சமாக ஜிம்பாப்வே அணியின் சகப்வா 34 ரன்களும் மற்றும் பிராட் எவன்ஸ் 33 ரன்களும் எடுத்தனர்.
இந்தியா அணியில் தீபக் சாஹர், அக்ஷர் பட்டேல், பிரசீத் கிருஷ்ணா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
அசத்தல் வெற்றி
இதையடுத்து 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 30.5 ஓவர் முடிவில் இலக்கை எட்டியது.
அதிரடியாக விளையாடிய ஷிகர் தவான் 81 ரன்களுடனும், சுப்மன் கில் 82 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கே.எல்.ராகுல் மகிழ்ச்சி
இந்த வெற்றி குறித்து பேசிய கேப்டன் கே.எல்.ராகுல் , நான் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன் இது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்த தொடரில் வெற்றி பெற்று முன்னிலையில் இருப்பது மிகவும் மகிழ்ச்சி.இந்த வெற்றிக்கு பந்துவீச்சாளர்கள் தான் காரணம்.
துல்லியமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தனர்.
வரக் கூடிய அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற முயற்சிப்போம் என்றார்.