இந்தியா அணியின் வெற்றிக்கு இது தான் காரணம் - ரோஹித் சர்மா
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் வெற்றி பெற்றது குறித்து கேப்டன் ரோஹித் சர்மா பேசினார்.
ஒரு நாள் போட்டி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்து அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு, அந்த அணியின் ஜாஸ் பட்லர் (30) மற்றும் டேவிட் வில்லே (21) ஆகிய இருவரை தவிர,
மற்ற வீரர்கள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கூட ரன் எடுக்காமல் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்தியா அபார வெற்றி
இங்கிலாந்து அணி இந்தியா அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 110 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தனர்.
இதன்பின் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா 76* ரன்களும், ஷிகர் தவான் 31* ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் இலகுவாக இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ரோஹித் சர்மா பெருமிதம்
இந்த வெற்றி குறித்து ரோஹித் சர்மா பேசுகையில், “டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணிக்கு சாதகமாக அமைந்துவிட்டது.
டாஸை இழந்திருந்தால் இந்த போட்டியின் முடிவு வேறு மாதிரியாக கூட இருந்திருக்கலாம். ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப நாங்கள் இந்த போட்டியில் மிக சிறப்பாக விளையாடினோம்.
ஆடுகளம் எப்படி இருந்தாலும் அதை பற்றி கவலைப்படாமல் அதற்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றி கொள்வதே முக்கியமானது.
முதல் போட்டி நடைபெற்ற ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது, எங்கள் பந்துவீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர்கள் என்பது தெரியும்.
அனைத்து பந்துவீச்சாளர்களும் தங்களது வேலையை மிக சரியாக செய்து கொடுத்தனர். எனக்கும், ஷிகர் தவானுக்கும் இடையேயான புரிதல் நன்றாக உள்ளது.
அணியின் தேவைக்கு ஏற்ப விளையாடுவதே முக்கியம். ஷிகர் தவான் மிக சிறப்பான வீரர், அவரது அனுபவம் எங்களுக்கு உதவியாக இருந்தது.
அடுத்தடுத்த போட்டிகளிலும் சிறப்பாக விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.