தோல்விக்கு இது தான் காரணம்; டூபிளசிஸ் வேதனை !!
பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக டூபிளசிஸ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு அணியை வீழ்த்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் அணி. இந்த ஆண்டின் ஐபிஎல் போட்டியின் 2-வது தகுதிச் சுற்று போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
முதலில் பேட் செய்த பெங்களூரு அணியில் தொடக்க ஆட்டக்காரரான விராட் கோலி 7 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் வீரர்களின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் பெங்களூரு அணி பேட்ஸ் மேன்களின் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிய தொடங்கியது.
கடந்த போட்டியில் அதிரடியாக ஆடிய ரஜத் படிதார் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து, 58 ரன்னில் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 21 ரன் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
கேப்டன் சஞ்சு சாம்சன் 23 ரன்கள் அடித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஜாஸ்பட்லர் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் 6 சிக்சர்களுடன் 106 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
18.1 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் குவித்தது. இதையடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
இந்த தோல்வி குறித்து பேசிய பெங்களூர் அணியின் கேப்டனான டூபிளசிஸ், பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கான முக்கிய காரணமாக அமைந்துவிட்டதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து டூபிளசிஸ் பேசுகையில், “பந்துவீசுவதற்காக நாங்கள் களத்திற்குள் வந்த போதே எதோ குறையுடன் தான் வந்தோம். 180 ரன்கள் எடுத்திருந்தால் கூட இந்த ஆடுகளத்திற்கு சரியாக இருந்திருக்கும்.
பேட்டிங்கின் போது துவக்கத்திலும், இறுதியிலும் சொதப்பிவிட்டோம். இந்த தோல்வி வேதனையையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
இருந்தாலும் எங்களை விட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியே இறுதி போட்டியில் விளையாட முழு தகுதியுடையது.
எங்களுக்கு மிகப்பெரும் ஆதரவு கொடுத்த ரசிகர்களுக்கு நன்றி கூற கடைமைப்பட்டுள்ளேன், தினேஷ் கார்த்திக், ஹர்சல் பட்டேல் போன்ற வீரர்கள் இந்த தொடரில் மிக சிறப்பாக விளையாடினர், இதன் மூலம் அவர்களுக்கு இந்திய அணியிலும் இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
ராஜத் படித்தர் திறமையான வீரர், எதிர்கால இந்திய அணிக்கு மிக சிறந்த வீரர் ஒருவர் கிடைத்துள்ளார். இந்த தொடருக்கு பிறகு மூன்று இந்திய அணியை கூட தேர்வு செய்ய முடியும்,
அந்த அளவிற்கு இளம் வீரர்கள் பலர் மிக சிறப்பாக விளையாடி வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் பேராதரவு கொடுத்த ரசிகர்களுக்கும், எங்களுக்காக வேலை செய்த எங்கள் அணியின் ஊழியர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நன்றி கூறி கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.