திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றம் - விண்ணை எட்டிய அரோகரா முழக்கம்
கார்த்திகை தீப திருவிழவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்பட்டது. பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
2668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டதை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் தரிசனம் செய்தனர். அப்போது எழுந்த அரோகரா முழக்கம் விண்ணை எட்டியது.
கோவில்களில் மட்டுமல்லாது வீடுகளிலும் விளக்கேற்றி பக்தர்கள் கார்த்திகை தீப திருவிழாவை கோலாகலமாக கொண்டாடினர். சிவபெருமானில் பஞ்ச பூத தலங்களில், நெருப்புத்தலமாக போற்றப்படுவது திருவண்ணா மலை.
சிவபெருமான் மலை வடிவமாக காட்சி அளிப்பதாக ஐதீகம். ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா இங்கு 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டு கார்த்திகை மாத தீபத் திருவிழா கடந்த வாரம் தொடங்கியது. இந்நிலையில் இன்று மாலை மகா தீபம் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, தீபம் ஏற்றுவதற்காக பிரம்மாண்ட கொப்பரை சிறப்பு பூஜைகளுக்கு பின் நேற்று மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
தீபத்துக்காக, 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகளும் மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
கார்த்திகை தீபத் திருவிழாவின் பத்தாவது நாளான இன்று அதிகாலைபரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கட்டளைதாரர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணிக்கு சாமி சன்னதி முன்பு அகண்டதீபம் ஏற்றப்பட்டது. அதே நேரத்தில், 2668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது.
அப்போது பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என்று முழக்கமிட்டனர். இதையடுத்து வீடுகளிலும் கார்த்திகை விளக்குகள் ஏற்றபப்ட்டன.
இதையடுத்து பல்வேறு கோயில்களிலும் மகா தீபம் ஏற்பட்டது. ஐபிசி தமிழ்நாடு யூடியூப் சேனலில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.
இதை ஏராளமான பக்தர்கள் நேரலையாக கண்டுகளித்தனர். இந்த திருவிழாவுக்கு 20 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்கலாம் என்றும் பங்கேற்கும் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.