திருவண்ணாமலை தீபம்; தீ பிடித்து எரிந்த மலைப்பாதை - பக்தர்கள் அதிர்ச்சி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா நேற்று நடைபெற்றது. இதற்காக 2,668 அடி உயரம் கொண்ட மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
இதனையொட்டி மலையின் மீது ஏற 2,500 பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. நேற்று காலை முதல் பிற்பகல் 2 மணி வரை மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்காக புகைப்படத்துடன் கூடிய அனுமதி அட்டை ஓவ்வொரு பக்தருக்கும் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பட்டாசு, கற்பூரம் மற்றும் தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டதுடன், தீவிர சோதனைக்கு பிறகே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர்.
மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அண்ணாமலையாருக்கு அரோகரா கோஷம் விண்ணை அதிரச் செய்தது.
தீப தரிசனம் முடிந்து பக்தர்கள் மலையில் இருந்து இறங்க தொடங்கினர். டார்ச் லைட்டுகள் மற்றும் செல்ஃபோன் டார்ச்சுகளை பயன்படுத்தி பதையை கண்டறிந்து இறங்கினர்.
பக்தர்களுக்கு ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உதவினர். இந்த நிலையில் பக்தர்கள் இறங்கிக் கொண்டிருந்த பாதையின் நடுவே மர்மநபர்கள் தீ வைத்தனர்.
அந்த பாதையின் ஓரம் காய்ந்த நிலையில் இருந்த மரங்கள், செடி கொடிகள் தீயில் பற்றி எரிந்தது. இதனைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சியுடைந்தனர். இதனையடுத்து பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.
சட்டென சுதாரித்த காவல்துறையினர் நெரிசல் ஏற்படமால் இருக்க மாற்றுப்பாதையில் இறங்க பக்தர்களுக்கு உதவி செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து, மலையில் மர்ம நபர்கள் வைத்த தீயினாலோ அல்லது பக்தர்களில் எவரேனுன் கற்பூரம் ஏற்றி வழிபடும் போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கூறியுள்ளனர். மேலும் தீ விபத்து குறித்து அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்