திருவண்ணாமலையில் பரபரப்பு - பொறியியல் பட்டதாரி அடித்து கொடூரக் கொலை
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை, படேல் அப்துல் ரசாக் தெருவை சேர்ந்தவர் முகமது. இவர் ஒரு பொறியியல் பட்டதாரி.இவர் சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 4ம் தேதி இரவு முகமது வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது, நல்லவன்பாளையம் 4 வழிச்சாலையில் நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த வழியாக வந்த முன்னா என்பவருக்கும், முகமதுவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கிருந்த அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். அன்று நள்ளிரவு 12 மணிக்கு அண்ணா நகர் முதல் தெருவில் முகமது சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, முன்னா மற்றும் அவரது உறவினர்கள் முகமதுவை வழிமறித்தனர்.
அப்போது, முகமதுவுக்கும், முன்னாவிற்கும் வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது, முன்னா மற்றும் உறவினர்கள் முகமதுவை இரும்பு கம்பி மற்றும் கத்தியால் சரமாரியாக தாக்கினார்கள். இதில், பலத்த காயமடைந்த முகமது ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார்.
அப்போது, முன்னாவும், அவரது உறவினர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது, மயங்கி கிடந்த முகமதுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை முகமது பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சம்பவம் நடந்த அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த கேமரா காட்சியில் முன்னா தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது.
இதனிடையே, முகமதுவை தாக்கிய முன்னாவின் உறவினர்களையும் கைது செய்யக்கோரி, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.