விதியினை மாற்றும் விதி செய்வோம் : கோயில் பூட்டை உடைத்து புரட்சி செய்த மாவட்ட ஆட்சியர்
திருவண்ணாமலை, செங்கம் அருகே தென் முடியனூரில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான முத்துமாரியம்மன் கோயிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் கோயிலின் பூட்டை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்குள் வழிபடுவதற்காக அழைத்து சென்றார்.
தொடரும் அவலம்
சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்னும் சில இடங்களில் சாதிய வன்மம் தொடர்கிறது, அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் தென் முடியனூர் கிராமம். இங்கு அமைந்து இருக்கும் முத்து மாரியம்மன் கோயில் சுற்று வட்டார பகுதி மக்களிடையே பிரசித்தி பெற்ற கோயிலாக திகழ்ந்து வருகிறது. அறநிலையத்துறையின் கீழ் வரும் இந்த கோவிலுக்கு பட்டியலின் மக்கள் கடந்த 80 வருடங்களுக்கு மேல உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.
தடை உடைத்த ஆட்சியர்
இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பட்டியலின மக்கள் தென் முடியனூர் முத்துமாரியம்மன் ஆலயத்திற்குள் நுழைய ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த உயர் சாதியினர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் பூட்டு போடப்பட்டு இருந்த நிலையில், அதனை உடைத்து பட்டியலின மக்களை கோயிலுக்குள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் அழைத்து சென்றார்.
80 ஆண்டுகளுக்கும் மேலாக தாங்கள் செல்ல முடியாத பகுதியாக இருந்த கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் நெகிழ்ச்சியோடு வழிபட்டனர்