திருவள்ளுவர் புகைப்படத்தில் சாதி, மத, சமயங்களை பூசுவதா? செல்வப்பெருந்தகை காட்டம்!
திருவள்ளுவரை கவி ஆடையுடன் வெளியிட்டது கண்டிக்கத்தக்கது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
திருவள்ளுவர்
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ் நாட்டில் வாக்குப்பதிவு முதற்கட்டமாக நிறைவடைந்தது. இதற்கிடையில், தமிழக ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி தனது பேச்சு மற்றும் செயல்பாடுகளால் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். குறிப்பாக தமிழக அரசுடன் ஏராளமான வேறுபாடுகள் ஏற்படுகிறது.
இந்நிலையில், புதிய சர்ச்சையை தற்போது கிளப்பியுள்ளார். அதாவது ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் “திருவள்ளுவர் திருநாள் விழா” நடைபெறும் என ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.ஆளுநரின் செயலாளர் கிர்லோஷ்குமார் பெயரில் அழைப்பிதழ் வெளியாகியுள்ளது. அதில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. பொதுவாக அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் பயன்படுத்தும் திருவள்ளுவர் படங்களில் அவர் வெள்ளாடை அணிந்திருப்பது தான் வழக்கம்.ஆனால், பாஜக மற்றும் இந்து அமைப்புகள் காவி நிற உடையோடு அச்சிட்டு வருகின்றனர்.
காவி உடை - சனாதன பாரம்பரியத்தின் துறவி திருவள்ளூவர்..? சர்ச்சையை கிளப்பும் அண்ணாமலை - ஆர்.என்.ரவி..!
செல்வப்பெருந்தகை
இந்த சூழலில், காவி உடை அணிந்த வள்ளுவரின் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டிருப்பது மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது. முன்னதாக ஜனவரி மாதம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, காவி உடை அணிந்த வள்ளுவரின் படத்தை பதிவிட்டு திருவள்ளுவர் தின வாழ்த்து கூறினார்.
இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது மீண்டும் இந்த விவகாரம் தலையோங்கியுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, 'அரசுடமையாக இருந்த சாதி, மத, சமய சார்பற்ற திருவள்ளுவரின் புகைப்படம், 1991இல், நாட்டுடமையாக்கப்பட்டது.
அதன் பிறகு, அந்தப் புகைப்படத்தை நாட்டில் உள்ள அனைவரும் அச்சிட்டு பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் புகைப்படத்தை மாற்றி, சாதி, மத, சமயம் சார்ந்து ஆளுநர் மாளிகை புகைப்படத்தை வெளியிடுவது சட்டத்திற்குப் புறம்பானது. சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஆளுநரே இப்படிச் செய்வது கண்டனத்திற்குரியது. வருத்தத்திற்குரியது" இவ்வாறு இணையத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.