திருவள்ளூரில் விஷ வாயு கசிவு விபத்து: இருவர் பலி, பலர் சிகிச்சையில்

Tamil nadu Accident
By Vinoja Jun 21, 2026 02:46 PM GMT
Report

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூரில் விஷ வாயு கசிவு விபத்து: இருவர் பலி, பலர் சிகிச்சையில் | Thiruvallur Ammonia Leak Two Dead Over 60 Affected

சிறப்பு சிகிச்சைக்கு உத்தரவு

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கான நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும், விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், விபத்தில் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ், அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

திருவள்ளூரில் விஷ வாயு கசிவு விபத்து: இருவர் பலி, பலர் சிகிச்சையில் | Thiruvallur Ammonia Leak Two Dead Over 60 Affected

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது,

“தனியார் இறால் பண்ணையில் ஏற்பட்ட அமோனியா விஷ வாயு கசிவால் 60-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேல்சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 10 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 7 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், வேல்ஸ் மருத்துவமனையில் 28 பேரும், வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 20 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சிலர் வெண்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.

சிகிச்சை பெற்று வருபவர்கள் அனைவரும் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மருத்துவமனைகளின் டீன்கள் நோயாளிகளின் உடல்நிலை குறித்து தொடர்ந்து தகவல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த விவரங்கள் உடனுக்குடன் முதலமைச்சருக்கும் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால் அது உண்மையல்ல.இதுவரை இருவர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.

சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில், அவர்களுக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் உரிய மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.