திருப்பரங்குன்றம் வழக்கு - அரசின் நிலைப்பாடு என்ன? மதுரை ஐகோர்ட் கேள்வி

Tamil nadu Law and Order
By Vinoja Jun 04, 2026 02:28 PM GMT
Report

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தாதது குறித்து தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னதாக, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிமன்றம் சில உத்தரவுகளை வழங்கியிருந்தது. ஆனால், அவை முறையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

திருப்பரங்குன்றம் வழக்கு - அரசின் நிலைப்பாடு என்ன? மதுரை ஐகோர்ட் கேள்வி | Thiruparankundram Deepam Case Update

இதற்கிடையில், அவமதிப்பு வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பிடம் நீதிமன்றம் பல முக்கிய கேள்விகளை எழுப்பியது.

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒருபுறம் இருக்கட்டும். முதலில், தீபம் ஏற்றும் உத்தரவை நடைமுறைப்படுத்த அரசு ஏன் முயற்சி செய்யக்கூடாது? இது ஒரு ஜனநாயக நாடு. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது அவசியம்.

அந்த உத்தரவை அமல்படுத்துவதில் அரசுக்கு என்ன சிக்கல்?” என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிபதிகளின் இந்த கேள்விகளுக்கு பதிலளித்த அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த விவகாரம் குறித்து அரசின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசிக்க வேண்டியுள்ளது எனத் தெரிவித்து கால அவகாசம் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழக அரசின் இறுதி நிலைப்பாட்டை வரும் ஜூன் 22-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, வழக்கின் விசாரணை ஜூன் 22-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.