திருப்பரங்குன்றம் விவகாரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஆட்சியர்
மதுரை திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை ஆட்சியர் பிரவீன் குமார் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற உத்தரவிடக்கோரி இந்து தமிழர் கட்சித் தலைவர் ராம ரவிக்குமார், சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், தீபமேற்ற உத்தரவிட்டார், ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனக்கூறி தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படவில்லை.

இதனை தொடர்ந்து மதுரை ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று(பிப்.2) நடைபெற்றது.
இதன்போது மதுரை ஆட்சியர் பிரவீன் குமார், காவல் ஆணையர் லோகநாதன், துணை ஆணையர் இனிகோ திவ்யன் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், சுமார் 1500 பேர் மலையேற முயற்சித்த போது சூழலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் பலனளிக்கவிலலை எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், நீதிமன்ற உத்தரவை மீற வேண்டும் என்ற எண்ணத்தில் எதையும் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவித்துள்ள மதுரை ஆட்சியர் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை காவல் ஆணையரும் இதே கோரிக்கையை கூறி பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.