நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது - ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திருமாவளவன் நன்றி தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற சுற்றறிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்ற வளாகங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் ஆகியோரின் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவுத் துறை அனைத்து நீதி மன்றங்களுக்கும் நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் இதைச் செய்யக் கூடாது என்று வலியுறுத்தினார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலாவை சந்திது ஆலோசனை மேற்கொண்டார்.
இதில் அம்பேத்கரின் புகைப்படம் அகற்றக்கூடாது என்ற தமிழக அரசின் நிலைப்பாட்டை ரகுபதி தெரிவித்தார். இதைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி எந்த தலைவர்களின் புகைப்படத்தையும் நீக்க உத்தரவிடப்படவில்லை என்றும் தற்போது உள்ள நடைமுறையே தொடரும் என்று தெரிவித்தார். இந்த தகவலை தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்டது.
திருமாவளவன் நன்றி
இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியீட்டுக்குள்ள த்விட்டேர் பதிவில் "புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படம் மற்றும் திருவுருவச் சிலை ஆகியவற்றை நீதிமன்ற வளாகங்களில் அப்புறப்படுத்தும்படி எந்த ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை என்பதை தமிழ்நாடு உறுதிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் சட்ட அமைச்சர் ரகுபதி அவர்களுக்கும் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அவர்களுக்கும் விசிக சார்பில் எமது நெஞ்சார்ந்த நன்றி" என்று தெரிவித்துள்ளார்.