பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்களில் நடிக்க விருப்பம் - திருமாவளவனின் சினிமா ஆசை
சினிமாவில் நடிக்க விரும்புவது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி உறுப்பினருமான தொல். திருமாவளவன் சமீபத்தில் நடத்திய போட்டோஷூட் மிகப்பெரிய அளவில் வைரலானது. இதனிடையே பிரபல ஊடகம் ஒன்றிற்கு அவர் பேட்டி அளித்துள்ளார்.
அதில் தன்னுடைய பிறந்த நாளையொட்டி புகைப்படங்கள் எடுக்க வேண்டும் என கட்சியினர் விருப்பப்பட்டதாகவும், தொடர்ந்து தொழில் முறை புகைப்படக்காரர்கள் மற்றும் கட்சியினர் வலியுறுத்தியதால் போட்டோ ஷூட்டிங்கிற்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திரைப்படங்கள் மூலமாக உங்களுடைய கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு ஏதாவது திட்டம் உள்ளதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு தன்னை 2 படங்களில் கெஸ்ட் ரோலில் கூட நடிக்க அழைத்தார்கள் என்றும், படப்பிடிப்பில் அவர்கள் சொல்லிக் கொடுத்தை செய்ததாகவும் திருமாவளவன் நினைவு கூர்ந்துள்ளார்.
இயக்குனர் களஞ்சியம் என்னை வைத்து படம் எடுப்பதாக கூறி தாடி வளர்க்கச் சொன்னார் என தனது தாடிக்கான ரகசியத்தையும் அவர் தெரிவித்துள்ளார். தற்கால இயக்குநர்களில் பா.ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் போன்ற இயக்குனர்கள் நல்ல தரமான படத்தை தருகின்றனர்.
எனவே குறிப்பிட்ட இந்த இயக்குநர்களின் படங்களில் நடிக்க விருப்பம் என மறைமுகமாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.