தவெக தலைவர் விஜய் பேசியதில் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை - திருமாவளவன்!
தமிழக அரசு படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருமாவளவன்
மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "கள்ளச்சாராய, நச்சுச்சாராய சாவு இந்தியா முழுமையும் உள்ளது.
இதற்கு தீர்வு பூரண மது விலக்கு. டாஸ்மாக் கடையில் விற்கும் மதுவாலும் பாதிப்பு உள்ளது. ஆகவே தேசிய அளவில் மது விலக்கு கொள்கை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசு முதலில் படிபடியாக டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும்.
உள்நோக்கம் இல்லை
கள் விற்பனை, டாஸ்மாக் மது உட்பட எந்த வகை மதுவும் வேண்டாம். முதல்வர் ஸ்டாலின் டாஸ்மாக் கடைகளை மூடினால் மக்களிடம் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும். பூரண மது விலக்கை ஆதரித்து விசிக சார்பில் பெரியார் பிறந்த நாள் அன்று மிகப் பெரிய மகளிர் மாநாடு நடை பெற உள்ளது.
தவெக தலைவர் விஜய் மாணவர்களிடம் நல்ல தலைவர்கள் உருவாக வேண்டும் என கூறியதில் எந்த உள்நோக்கமும் இருப்பதாக தெரியவில்லை. மாணவர்கள் நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் என்ற நோக்கத்தில் கூறியதாகவே நான் கருதுகிறேன் " என்று தெரிவித்துள்ளார்.