அரசியலை பொறுத்தவரை ரஜினிகாந்த் ஒரு தீர்க்கதரி - திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், விமான நிலையத்தில் வைத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடாது என தி.மு.க. மிரட்டியதாக, த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜுனா கூறியது கற்பனை என நினைக்கிறேன்.
ரஜினிகாந்த் அரசியல், அதிகாரம், ஆட்சி போன்றவற்றில் ஆர்வம் காட்டக்கூடியவரோ, மயங்கக்கூடியவரோ அல்ல என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ரஜினிகாந்த் அந்த நிலையில் இருந்தெல்லாம், வெளியேறிவிட்டார், விலகி நிற்கிறார். அவரை யாரும் ஆசைக்காட்டி மயக்கி அரசியலுக்குள் இழுக்க முடியாது.அதே நேரம் அவரை அச்சுறுத்தி வெளியேற்றவும் முடியாது என்ற நிலையை அடைந்துவிட்டார்.
ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர் கட்சி தொடங்க நினைத்தது உண்மை. ஆனால், இந்த அரசியலில் வலதுசாரிகள், சங்பரிவார்களின் தலையீடு, ஆதிக்கம் மேலோங்கி வரும் நிலையில் அது தனக்கு உகந்தது அல்ல என கருதினார்.
அரசியல் விஷயத்தில் தீர்க்கதரிசியாக முன்பே உணர்ந்து அதனை அவர் கைவிட்டுவிட்டார் என்பதே உண்மை. அவரை நேரில் சந்தித்து உரையாடியதன் அடிப்படையில், அவரை புரிந்து நான் கூறும் கருத்து இது. அவரை தி.மு.க. அச்சுறுத்தியது என கூறுவது கற்பனை.
அதற்காக அவர் அச்சப்பட்டு பின்வாங்கினார் என்பதும் கற்பனை. இது ரஜினியின் ஆளுமையை கொச்சைப்படுத்தும் விமர்சனமாகவே பார்க்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.