சங் பரிவார்களின் சதி வலையில் சிக்கிய விஜய் - திருமாவளவன் விமர்சனம்
உயிர்பலிகளை வைத்து விஜய் அரசியல் ஆதாயம் தேடுவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விஜய் வீடியோ
கரூர் தவெக கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, 3 நாட்களுக்குப் பின் விஜய் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் , நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. முதல்வர் பழி வாங்க வேண்டுமென்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என பேசியிருந்தார்.
திருமாவளவன் விமர்சனம்
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த செப் 27 இரவு 7.30 மணியளவில் கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிந்தது நிகழ்வை ஒருங்கிணைத்தவர்களின் பொறுப்பில்லாத போக்குகளால் நேர்ந்த பேரிடராகும்.
நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டதனால் உயிர் பிழைத்துள்னனர். தமிழ்நாடு அரசு, குறிப்பாக, முதலமைச்சர் அவர்கள் மேற்கொண்ட அதிவிரைவான நடவடிக்கைகளே உயிரிழந்தோரின் எண்ணிக்கை மென்மேலும் பெருகாமல் தடுக்கப்பட்டன.
அந்த பெருந்துயரம் குறித்து தகவலறிந்த உடனே மின்னல் வேகத்தில் இயங்கி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை களமிறக்கிவிட்டு மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தியதோடு சில மணி நேர இடைவெளியில் தனிவிமானம் பிடித்து நள்ளிரவு வேளையில் கரூருக்குச் சென்று அங்கே கதறியழுத மக்களுக்கு ஆறுதல் கூறியதுடன், மருத்துவமனைக்கும் சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மற்றவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். இதனை நாட்டுமக்கள் நன்கறிவர்.
ஆனால், இன்று விஜய் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி பதிவில் அவர் முதல்வர் மீது பழிசுமத்தும் வகையில் பேசியிருப்பது அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. அவர்மீதான பரிவுணர்ச்சியும் வீண் என்று எண்ணிட வைத்துள்ளது.
உயிர்ப்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம்
நடந்த பெருந்துயரத்திற்காக அவர் வருந்துவதாகத் தெரியவில்லை. பத்துமணி நேரமாகத் தன்னைக் காணும் பேராவலோடு காத்திருந்தவர்கள், அடியெடுத்து வைப்பதற்கும் இடமில்லாத அளவுக்கு ஏற்பட்ட கடும் நெரிசலில் சிக்கிக் கொண்டவர்கள் அதிலிருந்து வெளியேறிவிடவேண்டும், தம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்கிற பதைப்பில் ஒருவருக்கொருவர் நெட்டித் தள்ளி, ஏறிமிதித்துத் தப்பிக்க முயன்ற நிலையில்தான், இந்தப் பேரவலம் நடந்தேறியது என்கிற உண்மையை அவர் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
ஒருவேளை உணர்ந்திருந்தாலும் அதனை வேண்டுமென்றே திட்டமிட்டே மறைத்து திசை திருப்ப முயற்சிக்கிறார் என்பதிலிருந்து அவர் இந்த உயிர்ப்பலிகளை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதையே நோக்கமாக்க் கொண்டிருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறது. இதன்மூலம் அவர் அம்பலப்பட்டு நிற்கிறார்.
அந்த உயிர்ப்பலிகள் திடுமென வன்முறை வெடித்ததால் நேர்ந்த கொடூரமா? அல்லது நெடுநேர நெரிசலால் அங்கே குவிந்திருந்தவர்கள் நா வறட்சிக்குள்ளாகி, மிதிபாடுகளில் நசுங்கி மூச்சுத்திணறலுக்கு ஆட்பட்டதால் நேர்ந்த பேரவலமா? அவை "நெரிசல் சாவுகள் தான்" என்பது பாதிக்கப்பட்ட தொண்டர்களின் குடும்பத்தினரும் நாட்டுமக்களும் கண்கண்ட பேருண்மை ஆகும்.
ஆனால், இது வெளிப்புறத்திலிருந்து யாரோ தூண்டிவிட்டதனால் அரங்கேறியது என்கிற தவறான கருத்துருவாக்கத்தை உருவாக்கிப் பாதிப்படைந்த மக்களை மீண்டும் ஒரு மாயைக்குள் வீழ்த்திட விஜய் தரப்பினர் முயற்சிக்கின்றனர்.
இதிலிருந்து விஜய் அவர்களுக்குத் தவறான வழிகாட்டுதலையும் திமுகவுக்கு எதிரான வெறுப்பு அரசியலைப் போதிப்பதையும் துணிந்து செய்பவர்களின் கோரப்பிடியில் அவர் சிக்கியுள்ளார் என்றே உணரமுடிகிறது. அவர் இதனை உணர்ந்திட முயற்சிக்கவில்லை என்றால், இவர் மற்றவர்களின் கைக் கருவியாக முடங்கும் நிலையே உருவாகும்.
பாஜகவினரின் கருவி விஜய்
'பாஜக சொல்வதையே விஜய் அவர்களும் சொல்கிறார்' என்று பாஜக மேலிடம் அனுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவைச் சார்ந்த அனுராக் தாகூர் அவர்கள் கூறுவதிலிருந்தே, அவர் யார் பிடியில் சிக்கி உழலுகிறார் என்பதை அறியமுடிகிறது.
பாஜக உண்மை அறியும் குழுவை அமைத்திருப்பதிலிருந்தும், திமுக அரசுக்கு எதிராக இச்சூழலை மடைமாற்றம் செய்ய முயற்சிப்பதிலிருந்தும், தமிழ்நாட்டை அவர்கள் குறிவைத்து வெளிப்படையாகவே தங்களின் சித்துவிளையாட்டைத் தொடங்கிவிட்டார்கள் என்பதையும்; விஜய் அவர்கள், 'பாஜகவினரின் கருவி தான்' என்பதையும் உறுதிப்படுத்துகின்றனர்.
கரூர் பேரவலம்- விஜய் கருத்து:
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 30, 2025
------------------------
சங் பரிவார்களின் சதி வலையில் அவர் சிக்கி
உழல்வதையே உறுதிப்படுத்துகிறது!
------------------------
கடந்த செப் 27 இரவு 7.30 மணியளவில் கரூரில் நடந்த கொடூரம் நாட்டை உலுக்கிய பேரவலமாகும். 41பேர் கூட்ட நெரிசலில்
சிக்கி உயிரிந்தது… pic.twitter.com/q5XoQaZjH2
இந்நிலையில், தமிழ்நாட்டு மக்கள் இத்தகு சக்திகளிடம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக, வட இந்திய மாநிலங்களில் காட்டிய அரசியல் சூது-சூழ்ச்சி போன்ற கைவரிசைகளையெல்லாம் தமிழ்நாட்டிலும் செய்துகாட்ட முயற்சிக்கும் சங்பரிவார்களிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
அதாவது, அவர்களின் அரசியல் சதிகளை முறியடிக்க அனைத்துத் தரப்பு சனநாயக சக்திகளும் ஒரணியில் திரண்டு நிற்கவேண்டியது தவிர்க்க முடியாததாகும்" என தெரிவித்துள்ளார்.