தவெக மாநாட்டில் உருப்படியான கொள்கை கோட்பாடு இல்லை - திருமாவளவன் விமர்சனம்
விஜய் லட்சம் பேரை திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே முன்மொழிந்துள்ளார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
தவெக மதுரை மாநாடு
தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் 2வது மாநில மாநாடு நேற்று மதுரையில் நடந்தது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை விமர்சனம் செய்தார்.
மேலும், 1967 மற்றும் 1977 தேர்தல்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் போல் 2026 இல் நிகழும். தவெக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என பேசினார்.
திருமாவளவன் கருத்து
இந்த மாநாடு குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், "தவெகவின் 2வது மாநாடு வெற்றுக்கூச்சல் மற்றும் ஆரவாரங்களுக்கு அடையாளமாக இருந்தது. உருப்படியான கொள்கை கோட்பாடு முழக்கமோ, ஆக்கப்பூர்வமான செயல்திட்டங்களோ இல்லை.
ஆட்சிக்கு வருவோம் என்ற பகல் கனவையே கூச்சலாக முழங்கியுள்ளார். 2 மாநாடுகள் நடத்தியும் கொள்கை, கோட்பாடு, செயல்திட்டம் என்ன என்பது அவர்களுக்கே இன்னும் புரியவில்லை.
திமுக வெறுப்பே அவர்கள் உமிழ்ந்த அரசியல். இத்தனை லட்சம் பேரை திரட்டி வெறும் சவடால்களை மட்டுமே முன்மொழிந்துள்ளார். அவரின் பேச்சில் ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை" முன்வைத்துள்ளார்.