சீமான் பெரியாரை விமர்சிக்க காரணம் இதுதானா? - திருமாவளவன் சந்தேகம்
சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா என்ற கேள்வி எழுகிறது என திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அதில் பேசிய அவர், "ஆளுநர் ஆர்.என் ரவி மீண்டும் மீண்டும் தன்னை ஒரு அரசியல்வாதியாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறார்.தலித்துகள் முதல்வராக வர வேண்டும் என ஆளுநர் பேசுவது வலதுசாரி அரசியல் நாடகம். ஆளுநரின் பேச்சு அப்பாவி தலித்துகளை ஈர்க்கும் சூழ்ச்சியாகும்.
பெரியார் எதிர்ப்பு
வலதுசாரி இயக்கங்கள் இடதுசாரி இயக்கங்களை அழித்தொழிக்க நினைக்கின்றன. தேர்தல் நடைமுறைதான் பாஜக வளர காரணமாக உள்ளது. இடதுசாரி இயக்கங்கள் அரசியல் கோட்பாட்டோடு வலிமையோடு உள்ளன. வலதுசாரி இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தில் வலிமையோடு உள்ளன.
போலி தமிழ் தேசியவாதிகள் பெரியாரை கொச்சைப்படுத்தி வருகிறார்கள். எச்.ராஜா, அண்ணாமலை, குருமூர்த்தி ஆகியோர் பெரியார் எதிர்ப்பை ஆதரிக்க காரணம் என்ன? பெரியாரை ஏற்காதவர்கள் பிரபாகரனை வரவேற்றது உண்டா?
சீமான் செய்யும் அரசியல் அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் இப்போது பெரியாரை எதிர்க்க வேண்டிய விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன? என்று புரியவில்லை. ஈரோடு கிழக்குத் தேர்தலில் பாஜக ஆதரவாளர்கள் வாக்குகளை பெற இந்த யுக்தியை கையாளுகிறாரா? என்று ஐயம் எழுகிறது.
இன வாதம்
பார்ப்பன உயர்சாதி அமைப்புகள் பெரியாரை மிகக் கடுமையாக விமர்சித்து அவரை வீழ்த்த முயற்சித்தார்கள். ஆனால் முடியவில்லை. அதே வேலையை இவர் செய்கிறார் என்றால், சீமான் பாஜகவின் கொள்கை பரப்பு செயலாளரா? என்ற கேள்வி எழுகிறது.
தமிழ் தேசியம் என்ற பெயரால் தமிழர்களுக்கு எதிரான அரசியல் ஏன் செய்கிறார் என்ற கேள்வி எழுகிறது. அவர் கருத்தியல் ரீதியாக எந்த விவாதத்தையும் வலுவாக வைக்கவில்லை. தனிநபர் தாக்குதல் தான் செய்கிறார். இனவாதத்தை நோக்கி அவரது அரசியல் பரிணாமம் பெறுகிறது. அது அவரது அரசியலுக்கு நல்லதல்ல" என பேசினார்.