விஜயுடன் தேர்தல் கூட்டணி? முடிவை மாற்றுகிறாரா திருமாவளவன்?
விஜயுடன் கூட்டணி தொடர்பான கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என திருமாவளவன் கூறியுள்ளார்.
திருமாவளவன்
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வருகை தந்தார்.
அதன் பின் பழனி முருகன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மலை அடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஜீவசமாதியை வணங்கினார்.
ரேஷன் அரிசி கடத்தல்
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவரிடம், தஞ்சாவூர் ஆசிரியர் படுகொலை, ஓசூர் வழக்கறிஞர் படுகொலை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
மேலும், "ரேஷன் அரிசி கடத்தப்படுவது சம்பந்தமாக ஆதாரங்கள் இருப்பின் அதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி பழனி மலை அடிவாரத்தில் உள்ள வியாபாரிகளை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது" என பேசினார்.
விஜய் கூட்டணி
2026 தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "பொறுத்திருந்து பாருங்கள்" என பதிலளித்தார். விஜய் தனது மாநாட்டில் கூட்டணி கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசிய போது, விஜயின் அதிகாரத்தில் பங்கு தொடர்பான பேச்சு, திருவிழா கால சலுகை போல் உள்ளது என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், "நாங்கள் திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம் இது நாங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கூட்டணி. எனவே கூட்டணியில் இருந்து வெளியேற அவசியமில்லை" என தொடர்ந்து பேசி வந்தார். தற்போது, 'பொறுத்திருந்து பாருங்கள்' என கூறியது திருமாவளவனின் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றம் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
புத்தக வெளியீட்டு விழா
டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளின் போது நடைபெற உள்ள புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் விஜயும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே திமுக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனின் கூட்டணி தொடர்பான கருத்து திமுக தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராஜா, ஆதவ் அர்ஜுனாவின் மீது திருமாவளவன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.
தற்போது விஜயுடன் ஒரே மேடையை பகிர்ந்தால் திமுக தலைமைக்கு அதிருப்தி ஏற்படும் என புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொள்வதை தவிர்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.