இளையராஜா பாவம்..எல்லாம் இவர்களோட வேலைதான்: கொந்தளிக்கும் திருமாவளவன்
பிரதமர் மோடியின் ஆட்சி குறித்து இசையமைப்பாளர் இளையராஜா சொன்ன கருத்து குறித்து விசிக தலைவர் திருமாவளவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயரிலான புத்தகத்தை வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதி இருக்கும் நிலையில் அதில் மோடியின் ஆட்சியின் செயல்பாடுகளை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார் என்றும், மோடிக்கும், அம்பேத்கருக்கும் நிறைய விஷயங்களில் ஒற்றுமை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்தை பலரும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். இதுதொடர்பாக விசிக தலைவர் திருமாவளவன் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் சமூகத்தில் யார் மக்களோடு மக்களாக நெருக்கமாக உள்ளனரோ அவர்களை சங்பரிவார் கும்பலை சேர்ந்தவர்கள் சந்திப்பார்கள். அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இளையராஜாவைச் சுற்றிவளைத்து இருக்கக்கூடும் என நினைக்கிறேன்.
இளையராஜா பாவம் என்று அவர் மீது இரக்கம் காட்டவே விரும்புகிறேன். அம்பேத்கர் இன்னும் 5 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இந்தியாவின் தலையெழுத்தே மாறியிருக்கும். அவர் இருந்தால் மோடியை விமர்சித்திருப்பாரா என்று தெரியாது. ஆனால் அவரால் கண்டிப்பாக மோடியை சகித்திருக்க முடியாது. ஆர்எஸ்எஸ் அரசியலைக் கடைசி வரை மூர்க்கமாக எதிர்த்தவர் தான் அம்பேத்கர் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.