அதை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்படும் - திருமாவளவன்
நான் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும் என திருமாவளவன் பேசியுள்ளார்.
திருமாவளவன்
திண்டிவனத்தில் நேற்று(08.11.2024) இரவு விசிக நிர்வாகியின் இல்ல நிகழ்வில் விசிக தலைவர் தொல். திருமாவளவன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், "ஒரு ஊரில் கொடியை ஏற்றுவதே நமக்கு யுத்தம். காவல் துறை அனுமதிக்காது. அந்தப் பகுதியில் உள்ள மற்ற அரசியல் அமைப்புகளின் எதிர்ப்பு இருக்கும்.
திமுக சந்தித்த நெருக்கடி
நம்மை ஓரங்கட்ட பார்த்தாலும் ஒதுக்கப் பார்த்தாலும் நாங்களே மையம் என்பதை தீர்மானிப்போம். நீங்கள் தீர்மானிப்பது மையம் அல்ல நாங்கள் தீர்மானிப்பது தான் மையம்.
நாங்கள் இடம்பெற்றிருக்கக் கூடிய கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற திமுகவை விமர்சிக்கும் போது அதற்கு நான் பதில் சொல்லவில்லை என்றால் நான் இந்தக் கூட்டணியில் எதற்கு நீடிக்கிறேன் என்பதே கேள்விக்குறியாகவிடும். திமுக சந்தித்த நெருக்கடிகள் எல்லாம் அரசியல் களத்தில் விவரிக்கவே முடியாது. ஆனால், நாம் சந்தித்த நெருக்கடிகள் வேறு, அது திமுகவுக்கு கிடையாது.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது, இந்தக் கட்சிகள் எல்லாம் காணாமல் போய்விடும் என கூறினார்கள். இன்றைக்கு விஜய் வந்தவுடன் எவ்வளவு பயங்கர ஹைப். விஜய் ஆர்கானிக் மாஸ் என்கிறார்கள். அப்படியானால் விசிக என்ன இன் ஆர்கானிக் மாஸா?
10 ஆண்டுகள்
திருமாவளவன் தலைமையில் ஆட்சி அமையும் என யாரேனும் விவாதித்தார்களா? நான் அப்படிச் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படவில்லை. ஆனால் இதுதான் இந்த சமூகம். இப்படித்தான் நம்மை குறைத்து மதிப்பீடு செய்கிறார்கள்.
ஆசை காட்டினால் நாம் வெளியேறி விடுவோம் என நினைக்கிறார்கள். திருமாவளவன் சராசரி அரசியல்வாதி இல்லை என்பதை காலம் சொல்லும். அதனை புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்படும்.
யார் புதிய புதிய கட்சிகளை தொடங்கினாலும், எவ்வளவு பெரிய புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் அவர்கள் விடுதலை சிறுத்தைகளுக்கு போட்டியாக வர முடியாது. இந்தக் களத்தில் யாரும் நம்மோடு போட்டிக்கு வரமுடியாது" என பேசினார்.