சமூகச் சூழல் நமக்கு ஏதுவாக அமையவில்லை - திருமாவளவன் வேதனை
25 ஆண்டுகள் ஆகியும் சமூகச் சூழல் நமக்கு ஏதுவாக அமையவில்லை என திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
திமுக - விசிக தொகுதி பங்கீடு
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு கூட்டணி கட்சிகளிடம் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
2021 தேர்தலில் திமுக 6 கூட்டணியில் தொகுதிகளில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் விசிக வெற்றி பெற்றது.

சமீபத்தில் மாநில கட்சியாக அங்கீகாரம் பெற்ற விசிக, 2026 தேர்தலுக்கு இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை எதிர்பார்க்கப்படுகிறது.
முதற்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்துள்ள நிலையில், புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளதால் 7 தொகுதிகள் வரை வழங்க திமுக முன்வந்துள்ளது.
திமுக கூட்டணியில் இதுவரை, 43 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் விசிக, தேமுதிக, மநீம, மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி ஆகவில்லை.
சமூகச் சூழல் ஏதுவாக இல்லை
இந்நிலையில், கட்சி தொடங்கி 25 ஆண்டுகள் ஆகியும் இன்னும் சமூகச் சூழல் நமக்கு ஏதுவாக அமையவில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து Facebook நேர்காணலில் பேசிய அவர், "விசிக போராடியே தொகுதிகளை பெற்றாக வேண்டும். நெருக்கடி இடையிலே வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடிய பணிச்சுமைகள் இருக்கிறது.

கட்சி 25 ஆண்டுகளை கடந்தும் கூட இந்த களம் இன்னும் நமக்கு புதிதாகத்தான் இருக்கிறது. இன்னும் அதற்கு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ளவில்லை சமூகச் சூழலும் நமக்கு ஏதுவாக அமையவில்லை.
நாம் எந்த வகையிலும் வலிமை பெற்று, அரசியல் சக்தியாக பரிணமிக்கக்கூடாது என்று எண்ணுகிறவர்கள்தான் இங்கு பெரும்பான்மை. ஆனாலும் தேர்தல் களத்தில் 25 ஆண்டு காலம் தாக்குப்பிடித்திருக்கிறோம், தவிர்க்க முடியாத அரசியல் சக்தியாக களமாடுகிறோம்.
திருமாவளவன் நினைத்தால் தமிழ்நாடு அரசியலில் திசையை திருப்பிப்போட்டுவிட முடியும் என்றெல்லாம் சமூக ஊடகங்களில் கட்சி சார்பற்ற தோழர்கள் நமக்கு தொடர்பே இல்லாத ஜனநாயக சக்திகள் பேசுவதை கேட்டிருப்பீர்கள். ஆனாலும்கூட அப்படிப்பட்ட அரசியலை செய்ய விரும்பாமல், ஒரு நாகரிகமான அரசியல் மரபை நாம் கடைப்பிடிக்கிறோம்.
நாம் குறைவான எண்ணிக்கைகள் பெற்று போட்டியிட்டாலும் கூட தமிழ்நாடு முழுவதும் விருப்பமனு பெறுதல் என்பது ஜனநாயக கடமை. அதனை கடைப்பிடித்து வருகிறோம்.
வேட்பாளர் தேர்வில் நெருக்கடி
நாம் 23 கட்சிகள் அங்கம் வகிக்கிற திமுக கூட்டணியில் இருக்கிறோம், நாம் போட்டியிடக் கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறைவுதான் என்றாலும்கூட, இந்த தொகுதிகளை கேளுங்கள் என அம்மாவட்டப் பொறுப்பாளர்கள் கேட்பதாக விருப்பமனு அமையும்.
மக்கள் நல கூட்டணியில் இருந்தபோது 25 தொகுதிகள் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. அப்போது நான் சுதந்திரமாக முடிவெடுக்க முடிந்தது பலருக்கு வாய்ப்பளிக்க முடிந்தது.
10-க்கும் கீழ் மிக சொற்பமான இடங்களை பெறுகிறபோது, நீண்ட காலமாக காத்திருப்போர் பட்டியலை கணக்கில்கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தந்த தொகுதிகளை சார்ந்தவர்களை வேட்பாளராக தேர்வு செய்ய வேண்டும் என்பது மிக முக்கியமான கருத்தாகவும் இருக்கிறது.
அரக்கோணம், வானூரில் ஏன் தோற்றோம் என்கிறபோது திமுக சொன்னது நீங்கள் வெளியிலிருந்து ஆளை இறக்கினீர்கள் உள்ளூரைச் சார்ந்த யாரையும் போடவில்லை என்கிற கருத்து சொல்லப்பட்டது.
ஆனால், ஒரு வேடிக்கையான விஷயம் நாம் போட்டியிட்ட 6தொகுதிகளிலுமே தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்த வேட்பாளர்களைத்தான் போட்டியிட வைத்தோம். 4 இடங்களில் வெற்றி பெற்றோம்.
வேட்பாளர்களை முடிவு செய்யும் பொழுது சுதந்திரமாக எந்த அழுத்தமில்லாத சுதந்திரத்தை இயக்கத் தோழர்கள் வழங்க வேண்டும். நேரடியாக என்னை சந்தித்து நெருக்கடிக்குள்ளாக்குகிற நிலை தொடர்கிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சித் தலைவரை அவ்வளவு இலகுவாக சந்தித்து இந்த அழுத்தத்தை யாராலும் தர முடியாது. எந்த கட்சியிலும் இது நடக்காது" என பேசியுள்ளார்.