கூட்டணிக்கு அழைப்பு விடுத்த அதிமுக - அதே மேடையிலே விளக்கமளித்த திருமாவளவன்
அதிமுகவின் சூசக கூட்டணி அழைப்புக்கு திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
வழக்கறிஞர் கூட்டம்
மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தென் இந்திய வழக்கறிஞர்களின் சார்பாக அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து சென்னையில் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விசிக தலைவர் திருமாவளவன், அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இன்பதுரை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இன்பதுரை பேச்சு
நிகழ்வில் பேசிய இன்பதுரை, "திருமாவளவன் எங்குச் செல்வார் எனத் தமிழ்நாடே காத்துக் கொண்டிருக்கிறது. திருமாவளவன் நம்மோடு தான் இருக்கிறார். வழக்கறிஞர் எங்கே இருக்கிறாரோ அங்கே இருப்பார் என்று தான் சொல்கிறேன். நான் அரசியல் பேச வரவில்லை" என பேசினார்.
திமுக கூட்டணியில் விசிக அங்கம் வகித்து வரும் நிலையில், திருமாவளவன் எங்களோடுதான் இருக்கிறார் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
திருமாவளவன் விளக்கம்
இதனையடுத்து பேசிய திருமாவளவன், "நாங்கள் மக்களோடு இருப்போம். கட்சிகளோடு அல்ல. இதுதான் அன்பு சகோதரர் இன்பதுரைக்கான பதில். மக்களுக்காக போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும் அங்கு நிற்போம். சாதி, மத அடையாளம் தாண்டி சிந்திப்பதில் பக்குவம் பெறுவோம்.
யாரும் எந்தக் கட்சியிலும் இருக்கலாம். அவர்களை எதிர்கொள்ளும்போது கைகுலுக்கிக் கொள்ளலாம். அதில் ஒன்றும் தவறில்லை. உங்கள் கொள்கை உங்களுக்கு. எங்கள் கொள்கை எங்களுக்கு. தேர்தல் அரசியல் என்பது கட்சி நலன். காலச் சூழலை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டும்" என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருமாவளவன், "நாங்கள் ஏற்கனவே திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். விசிக சேர்ந்து உருவாக்கி இயங்கிக் கொண்டிருக்கிற கூட்டணி இந்தியா கூட்டணி. ஆகவே, இன்னொரு கூட்டணி உருவாக்கும் தேவை இல்லை" என கூறினார்.