சாம்சங் போராட்டம்; சங்கத்தை பதிய அரசுக்கு அதிகாரம் உள்ள போது ஏன் தயக்கம்? திருமாவளவன் கேள்வி
சாம்சங் நிறுவனத்தின் அடக்குமுறை போக்கிற்கு எதிராகவே இருக்கிறோம் என திருமாவளவன் பேசியுள்ளார்.
சாம்சங் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் தொழிற்சாலையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதனையடுத்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தியும் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று போராட்ட பந்தலை பிரித்த காவல்துறை, நள்ளிரவில் ஊழியர்களின் வீடுகளுக்கு சென்று கைது செய்தது. இதனையடுத்து திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தி வரும் ஊழியர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
திருமாவளவன்
இதன் பின் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மூத்த தலைவர் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பால கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினர்.
இதில் பேசிய திருமாவளவன், "அமைதியாக போராடிய தொழிலார்கள் மீது வழக்கு பதியப்பட்டது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் கைது செய்யப்பட்ட ஊழியர்கள் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும்.
முதல்வருடன் சந்திப்பு
இந்த பிரச்னையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரடியாக தலையிட்டால் தான் சுமூகமான தீர்வு கிடைக்கும் என்பதால் இது குறித்து முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து பேசுவோம். ஒரு சங்கத்தை பதிவு செய்வதற்கு தொழிலாளர் நலத்துறை இணை ஆணையருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி ஒரு சங்கத்தை பதிவு செய்வதில் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் என்ன தயக்கம்?
சாம்சங் நிறுவனத்திற்கு நாங்கள் எதிராக இல்லை. அவர்களின் அடக்குமுறை போக்கிற்கு எதிராக இருக்கிறோம். பன்னாட்டு நிறுவனங்களின் முதலீட்டுக்கு எதிராக நாங்கள் இல்லை. அவர்கள் தொழிலாளர்களை சுரண்டுவதைதான் எதிர்கிறோம்." என பேசினார்.