ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள் - அண்ணாமலையின் சர்ச்சை பேச்சுக்கு திருமாவளவன் கண்டனம்

Thol. Thirumavalavan BJP K. Annamalai
By Thahir Feb 26, 2023 04:43 AM GMT
Report

ஒரு நிகழ்ச்சியில் ’ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்’ என்று பேசியதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் காணொலியைப் பகிர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருமாவளவன் கண்டனம்

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “'ஆர்டர் கொடுக்க மோடி இருக்கிறார்; சுட்டுத்தள்ளுங்கள்' என ஒருவர் பேசுவதை அசட்டுத் துணிச்சல் என்பதா? முதிர்ச்சியில்லா அரைவேக்காட்டுத்தனம் என்பதா? திட்டமிட்டே வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் கும்பலின் கலாச்சாரம் என்பதா?.

thirumavalavan-condemned-annamalai-speech

எதுவாயினும் இது தலைமைப் பண்புக்குரியதாகுமா?. மோடியும் என்னைப்போன்ற ஒரு பொறுப்பற்ற நபர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாரா? இவர்மீது வழக்குப்பதிந்து கைது செய்திருக்க வேண்டாமா? தில்லியை ஆளும் கட்சிக்கு மாநிலக் கிளைத்தலைவர் என்றால் அவர்மீது சட்டம் பாயாதா?. தமிழ்நாடு முதலமைச்சர், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கவும்” என தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள வேலம்பட்டியில் ராணுவ வீரர் பிரபு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக பாஜக சார்பில் சென்னை சுவாமி சிவானந்தா சாலையில் சில நாட்களுக்கு முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அந்த நிகழ்வில் பேசிய அண்ணாமலையில் வீடியோ கிளிப்பிங்கைத்தான் திருமாவளவன் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளார்.