இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அஞ்சி அஞ்சி வாழ்கிறார்கள் - மக்களவையில் திருமாவளவன் கொந்தளிப்பு..!
மணிப்பூர் கலவரம் தொடர்பாக நேரடியாக நான் மற்றும் சக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்று பார்த்தோம் அப்போது, 90 நாட்களாக எங்களுக்கு என்ன நேர்ந்து இருக்கிறார் என்பது பற்றி பிரதமர் வாய் திறக்கவே இல்லை.கண்டிக்கவே இல்லை.
மணிப்பூர் மாநில முதலமைச்சர் வந்து எங்களை சந்திக்கவே இல்லை, எங்களுக்கு ஆறுதல் கூறவே இல்லை என்று குக்கி சமூகத்தைச் சார்ந்த மக்கள் மட்டும் அல்ல மெய்தி சமூக மக்களும் தங்கள் வேதனையை பகிர்ந்து கொண்டார்கள் மணிப்பூர் மக்கள் மாநில அரசின் மீதும் இந்திய ஒன்றின் அரசின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கிற நிலையில் எதிர்க்கட்சிகளும் நம்பிக்கையை இழந்து நிற்கிறோம்.
150க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஏராளமான பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்கள். கார்கில் போரில் பங்கேற்ற ராணுவ வீரரின் மனைவியும் மானப்பங்கம் செய்யப்பட்டுள்ளார். அவரே வேதனைப்பட்டு சொல்லியிருக்கிறார். இந்த நாட்டை காப்பாற்ற முயன்ற என்னால் என் மனைவியை காப்பாற்ற முடியவில்லை என்று சொன்னது உலக அரங்கில் எதிரொலித்துள்ளது.
இது இந்த நாட்டுக்கு மிகப்பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது என்றார். மேலும் பேசிய அவர், பிரதமர் மீதான நம்பிக்கை நாடு இழந்து நிற்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கரையாக்கப்பட்டுள்ளது. 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிற்கும் அவலம் இந்த அரசுக்கு தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களை நிர்வாணப்படுத்தி, ஊர்வலம் நடத்தி பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.
இதற்காக அரசு வருத்தம் தெரிவித்திருக்க வேண்டாம். ஆனால் பிரதமர் ஒரே வரியில், தனது கண்டனத்தை தெரிவித்துவிட்டு தனது வேலையை செய்ய அவர் சென்றுவிட்டார். இந்த அவைக்கு அவர் வரவேண்டும் என வலியுறுத்தி இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ளது. இந்தியாவின் வேறெந்த பகுதியில் இல்லாத வகையில், மணிப்பூரில் அரசின் ஆயுதங்கள் திருடப்பட்டுள்ளது. மணிப்பூர் அரசே அதனை மைத்தி சமூக மக்கள் இதனை நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது.
அவ்வாறு கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களை திரும்ப பெற அந்த மாநில அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அந்த மாநில ஆளுநரை சந்தித்து எதிர்க்கட்சிகள் சார்பில், இது குறித்தெல்லாம் சொன்னோம், ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.மணிப்பூரில் மட்டுமில்ல, ஹரியானா மாநிலத்திலும், இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டம் தலைவிரித்தாடுகிறது. இஸ்லாமியர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் போன்ற அமைப்புகள் கிருத்தவ, இஸ்லாமிய சிறுபான்மை மக்களுக்கு எதிராக உறுதி மொழி எடுக்கின்றனர். இங்கே ஹிந்து ராஷ்டிரத்தை அமைத்து, இஸ்லாமிய, கிருஸ்தவ மக்களை அழித்தொழிப்போமே என்றும் அதற்காகவே இங்கு ஆயுதம் ஏந்துகிறோம் என வெளிப்படையாக பேசுகிற அவலம் இங்கே தலைவிரிதடுகிறது. குஜராத், ஹரியானா மட்டுமில்லாமல், ஜெய்ப்பூரில் ரயிலில் சென்ற காவலர் ஒருவர், முஸ்லிம்களை அடையாளம் கண்டு தேடி, தேடி சென்று 3 இஸ்லாமியர்களை சுட்டுக்கொன்றுள்ளார். மேலும், பிரதமர் மோடிக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என அவர் கோஷமிட்டுள்ளார்.
ஆகவே நாட்டில் என்ன நடக்கிறது. நாட்டில் இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் அஞ்சி அஞ்சி வாழும் அவலம் இருக்கிறது. தலித் மக்களுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.இப்படிப்பட்ட தலித், பழங்குடி, இஸ்லாமிய கிருஸ்தவ மக்களுக்கு எதிரான அரசின் மீது நாடே தற்போது நம்பிக்கை இழந்து தவிக்கிறது. சிறுபான்மை மக்கள் மட்டுமில்ல, ஹிந்து பெருபான்மை மக்களும் இந்த அரசின் மீது நம்பிக்கையை இழந்துள்ளனர்.
கடந்த 9 ஆண்டுகளில் 12 லட்ச கோடி ரூபாயை கார்பொரேட் நிறுவங்களுக்காக இந்தப் தள்ளுபடி செய்திருக்கிறது . ஆனால், அதே நேரத்தில் சாதாரண மக்கள் பயன்படுத்த கூடிய சமையல் எரிவாயுவின் விலை உயர்ந்திருக்கிறது. தக்காளி விலை 200 ரூபாய்க்கு விற்பனையாகும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டுள்ளது பெருபான்மை இந்து சமூக மக்கள் தான் .
ஆகவே இந்த அரசு சிறுபான்மை மக்களுக்கு மட்டுமல்ல, இந்து பெருபான்மை மக்களுக்கும் எதிராக இருக்கிறது என்பதை இங்கே நான் சொல்லிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன். ஒட்டுமொத்த இந்து மக்கள் தான், கர்நாடகாவில் பாஜகவை வீழ்த்தி, காங்கிரஸை இன்றைக்கு ஆட்சியில் அமரவைத்துள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த தரப்பு மக்களின் நம்பிக்கையை இந்த அமைச்சரவை மீது, பிரதமர் மோடி மீது, எனது நம்பிக்கையின்மையை தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
SC, ST மக்களுக்கு மற்றும் OBC மக்களுக்கான இடஒதுக்கீட்டை இந்த அரசு நிரப்பவில்லை. அவர்களுக்கான கல்வி உதவி தொகை நிறுத்தப்படுகிறது. திட்டமிட்டே அவர்களின் கல்வியை பறிக்கிறார்கள். '
அதே போல காலி பின்னடைவு இடங்கள்(backlog vacancies) ஏராளமாக இருக்கின்றன. அவற்றை நிரப்புவதற்கு இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. ஆகவே, எதிர்க்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை நான் வரவேற்கிறேன் என கூறி, இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலகவேண்டும் என அமர்கிறேன் என திருமாவளவன் நாடாளுமன்றத்தில் பேசினார்.