ஜெய் பீம் படத்திற்கு இதனால் தான் விருது இல்லை...திருமா கருத்து
ஜெய் பீம் படத்திற்கு தேசிய விருது வழங்கப்படாததற்கு, அனைவரிற்கும் இருப்பது போல தனக்கும் ஆதங்கம் தான் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் பேட்டி
சாலிகிராமம் பிரசாத் லேப்பில் "RED SANDAL WOOD " என்ற படத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் பார்வையிட்டு பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “Red sandal wood" திரைப்படம் 2015 ஆம் ஆண்டு ஆந்திர காடுகளில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
தமிழர் வரலாற்றில் மறக்க முடியாது கொடூரம் தமிழர்கள் ஆந்திராவில் கொல்லப்பட்டது என தெரிவித்த திருமாவளவன், ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் குறித்து முழுமையாக தகவல் சேகரித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்” என தெரிவித்தார்.
ஜெய் பீம் பட விவகாரம்
தொடர்ந்து அவரிடம் செய்தியாளர்கள் தேசிய விருதுகளில் ஜெய் பீம் படம் ஒதுக்கப்பட்டதை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, தங்களுக்கு இருப்பது போல தான் தனக்கும் ஆதங்கம் இருக்கிறது என தெரிவித்த அவர், காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததில் இருந்து இன்றைக்கு எந்த அளவுக்கு இந்த ஆட்சியாளர்கள், எந்த சிந்தனை ஓட்டத்தில் இருக்கிறார்கள் என்றும் கலைத்துறையை எவ்வாறு அவர்கள் கையாள பார்க்கிறார்கள் என்பது இந்த படத்திற்கு அவர்கள் விருது கொடுக்கப்பட்டதிலிருந்து நம்மால் புரிந்து கொள்ள முடியும்" எனப் பதிலளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேசிய விருது விவகாரத்தில் பிரகாஷ் ராஜ் கூறியதை போல காந்தியை சுட்டவர்கள் எப்படி ஜெய் பீம் படத்திற்கு விருது கொடுப்பார்கள் என்ற கருத்தையே தானும் வழிமொழிகிறேன் என கூறினார்.