ஆதவ் அர்ஜுனாவின் கோவம் நியாயமானது.. அதற்கு காரணம் இதுதான் - திருமாவளவன்!
ஆதவ் அர்ஜுனாவின் கோவம் நியாயமானது தான் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனா கட்சியின் நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறி 6 மாதம் இடை நீக்கம் செய்யப்பட்டார்.
திமுகவை ஆதவ் அர்ஜுனா கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமாவளவன் இந்த நடவடிக்கையை எடுத்தார் என விமர்சிக்கப்பட்டு வந்தது. கட்சியில் இருந்து கடந்த வாரம்,
ஒழுங்கு நடவடிக்கைக்காக ஆதவ் அர்ஜுனாவை கட்சியிலிருந்து திருமாவளவன் இடைநீக்கம் செய்திருந்தார். இந்த நிலையில், கட்சியில் இருந்து முழுவதும் விலகுவதாக ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். இது தொடர்பாக சென்னை விமான நிலையத்திற்கு வந்த விசிக தலைவர் திருமாவளவனிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அவர், "ஆதவ் அர்ஜுனா நல்ல நோக்கத்தில் தான் கட்சியில் வந்து இணைந்தார். எனக்கு எத்தனையோ கட்சியில் தொடர்பு இருந்தாலும், திமுகவில் கூட என்னால் இணைந்து செயல்பட்டிருக்க முடியும்.
காரணம்
ஆனாலும், தலித் மக்களின் நலனுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறி தான் விசிக-வில் சேர்ந்தார். தற்போது அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், 'என்னுடைய நியாயமான கோபங்கள், மக்கள் நலனுக்காக நான் வெளியிடும் கருத்துகள் எனக்கும்,
திருமாவுக்கும் இடையில் இருக்கும் உறவை பாதிப்பதாக இருக்கிறது. அதற்கு இடம் கொடுக்க விரும்பவில்லை. அதனால், விலகுகிறேன்' என்று கூறியுள்ளார். இடைநீக்கம் செய்தப்பிறகு அதுக்குறித்து பொதுவெளியில் கருத்து சொல்வது வழக்கமில்லை.
தலைமையிடமோ, ஒழுங்கு நடவடிக்கை குழுவிடமோ அதுக்குறித்து பேசி, ஒழுங்கு நடவடிக்கை தேவையில்லை என தலைமையும், குழுவும் கருதினால், அந்த நடவடிக்கை நீக்கப்படும். இது தான், ஒவ்வொரு கட்சியிலும் நடைமுறை.
ஆனால், இடைநீக்கம் செய்த அன்றே அவர் அறிக்கை வெளியிட்டது கட்சிக்கும், தலைமைக்கும் எதிராக இருந்தது. அது அவருக்கு சரியாக இருந்தாலும், கட்சியின் நடைமுறைக்கு சரியானது அல்ல. நமக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும்,
நாம் பேசுவது சரியாக இருந்தாலும், மக்களுக்காக பேசுகிறோம் என்றாலும் கட்சியின் நடைமுறைப்படி இயங்குவது தான் முதலில் முக்கியம். அவரை நீக்கம் வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. கட்சியின் நடைமுறைக்கு உட்பட்டு இயங்க வேண்டும் என்பது தான் இடைநீக்கத்தின் நோக்கம்" என்று தெரிவித்துள்ளார்.