''பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் சேரமாட்டோம்'' - திருமாவளவன் திட்டவட்டம்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. சசிகலா வருகை, கூட்டணிப் பேச்சு என தேர்தலுக்கு முன்பாக காட்சிகள் பல மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனிச்சின்னம், கூட்டணி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், ''நாங்கள் திமுக கூட்டணியில் தான் இருக்கிறோம். எங்கள் கட்சியின் நிர்வாக கட்டமைப்பில் மாற்றம் செய்து வருகிறோம். மாற்றங்கள் முடிந்ததும் தேர்தல் பணிகளை தொடருவோம். தொகுதி பங்கீடு குறித்து திமுகதான் முடிவெடுக்கும். உதயசூரியனில் போட்டியிடும்படி திமுக வெளிப்படையாக சொல்லவில்லை. சுயேச்சை சின்னத்தால் வெற்றி வாய்ப்புகள் பாதிக்கலாம்.
திமுக தரப்பில் நியாயம் இருக்கிறது.
அதேபோல், சின்னம் தொடர்பாக முடிவெடுக்கும் சுதந்திரம் எங்களுக்கு இருக்கிறது. விசிகவின் தனித்தன்மை பாதிக்கப்படாத வகையில் முடிவெடுப்போம். தனிச்சின்னத்தில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறோம். பாமக, பாஜக இடம்பெறும் அணியில் சேரமாட்டோம்'' என்றார் திருமாவளவன்.