மழை காரணமாக திருப்பதி நடைபாதை 2 நாட்களுக்கு மூடல்
புயல், மழை காரணமாக திருமலைக்குச் செல்லும் இரு நடைபாதை மாா்க்கங்களும் நவ.17, 18-ஆம் தேதிகளில் மூடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல்சின்னம் காரணமாக ஆந்திரத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, திருமலை திருப்பதி தேவஸ்தானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலைக்கு செல்லும் அலிபிரி மற்றும் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை மாா்க்கங்கள் இரண்டையும் நவ.17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் மூட உள்ளது.
தற்போது மழைக்காலம் என்பதால் மலைப்பாதை மற்றும் நடைபாதை மாா்க்கங்களில் மண்சரிவு ஏற்படும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது.
எனவே, தேவஸ்தானம் இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. தரிசன டிக்கெட் இருந்தாலும் பக்தா்கள் இந்த இரு நாள்களும் நடைபாதை மாா்க்கத்தில் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள்.
மேலும் இரவு நேரத்தில் பலத்த மழை அதிகமாக இருந்தால் மலைப்பாதை மாா்க்கங்களை மூடி அதிகாலை மீண்டும் திறக்கலாமா என தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்த அறிவிப்பு பின்னா் வெளியிடப்படும். பக்தா்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தானம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.